Header Ads

இந்தோனேசியாவில் தீவிரவாத தாக்குதல்: 3 பேர் கைது

இந்தோனேசியா நாட்டின் தலைநகர் ஜகார்த்தா. அங்கு வெளிநாட்டு தூதரகங்கள், ஐ.நா. அலுவலகம் உள்ளிட்டவை அடங்கிய பகுதிக்கு அருகில் தாம்ரின் வீதி உள்ளது. அங்கு வணிக வளாகங்கள், போலீஸ் சோதனை சாவடி ஆகியவை அமைந்துள்ளன.

அங்கு நேற்று காலை உள்ளூர் நேரப்படி 10.50 மணிக்கு அங்கு ஒரு காபிக்கடைக்கு வெளியே வாகனங்கள் நிறுத்துமிடத்தில் முதலில் குண்டுவெடித்தது. அதே பகுதியில் அமைந்துள்ள போலீஸ் சோதனை சாவடி உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து 6 குண்டுகள் வெடித்தன.

இதன் காரணமாக அந்தப் பகுதியே குலுங்கியது. எங்கும் ஒரே புகை மண்டலமாக காணப்பட்டது. அதற்கு மத்தியில், எங்கு பார்த்தாலும் பதற்றமும், பரிதவிப்பும் காணப்பட்டது. நெல்லிக்காய் மூட்டை போல மக்கள் அங்குமிங்கும் சிதறி ஓடினார்கள்.

உடனடியாக அந்த பகுதிக்கு போலீசார், பெருமளவில் வாகனங்களில் திரண்டு வந்தனர். அதைத் தொடர்ந்து போலீசாருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே பலத்த துப்பாக்கி சண்டை நடந்தது.

முடிவில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் 4 பேர் கொல்லப்பட்டனர். பொதுமக்களில் 3 பேர் உடல் சிதறி பலியானதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. ஆனால் அவர்கள் போலீஸ் அதிகாரிகள் எனவும் சொல்லப்படுகிறது. 10–க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிய வந்துள்ளது. அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு எந்தவொரு தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

இந்த நிலையில் இன்று உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த போலீசார் கூறும் போது, இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகப்படும் 3 பேரை கைது செய்துள்ளோம். தாக்குதல் நடந்த இடத்துக்கு அருகே ஒரு ஸ்டார் பக்ஸ் காபி ஷாப்பில் இவர்கள் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டனர். என்று கூறியுள்ளார்.

No comments:

Powered by Blogger.