Header Ads

அன்புடன் அந்தரங்கம்

அன்புள்ள அம்மாவுக்கு,
என் வயது, 21; மிகவும் கறுப்பாக இருக்கிறேன். எங்கள் தெருவில் உள்ள அனைவரும்,'நீ ஏன் இவ்வளவு கறுப்பாக இருக்கிறாய்...' என்று கேட்கின்றனர். நான் கல்லுாரி விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய தோழி, 'நான் உன்னை விட பரவாயில்லை; உனக்கு நான் கலராகத் தான் இருக்கின்றேன்...' என்று, என்னிடம் பல முறை கூறியிருக்கிறாள்.
ஒரு சிலர், என் நிறத்தை சுட்டிக் காட்டினாலும் பரவாயில்லை. அடிக்கடி இந்தக் கேள்வியை பலர் கேட்பதால், மன உளைச்சலுக்கு ஆளாகி, 'நான் ஏன் உயிர் வாழ வேண்டும்; இறந்து விடுவது நல்லது...' என்று பலமுறை தற்கொலைக்கு முயற்சித்துள்ளேன்.
இந்த எண்ணங்களை எல்லாம் விட்டு, தன்னம்பிக்கையோடு படிச்சு, வேலைக்கு போகணும்ன்னு முடிவு செய்தேன். ஆனால், அங்கும் அழகாக உள்ள பெண்களைத் தான் தேர்வு செய்வர் என்று அறிந்ததும், மனம் உடைந்து போனேன்.
நான் கறுப்பாய் இருந்தாலும் பரவாயில்ல என்று என்னை நானே தேற்றிக் கொண்டாலும், 'இவ்வளவு கறுப்பாக இருக்கும் இவளை யார் கல்யாணம் செய்துக்குவாங்க'ன்னு, என் முதுகுப் பின்னாடி பேசுறது வருத்தமாக இருக்கிறது. இதனால், என் உறவினர்களுடனோ, நண்பர்களுடனோ சரிவர பேசுவதில்லை.
கறுப்பானவர்களை வெளுப்பாக்கும் சில விளம்பரங்களை பார்த்திருக்கிறேன்; ஆனால், இது உண்மையான்னு தெரியல என் உடலில் உள்ள மெலனின் அளவு குறைந்தால், நார்மல் கலர் வருமான்னு தயவு செய்து கூறவும்.
அழகாக, கலராக, இருக்கிறவங்க தான் இந்த உலகத்தில் வாழணும்ன்னா, என்னை மாதிரி இருக்கிறவங்களுக்கு இந்த உலகத்தில் இடமே இல்லையா... இதை அடிக்கடி நினைத்து, மனநிலை பாதித்து விடுமோ என பயமா இருக்கு; தயவு செய்து என்னை உங்க மகளாக நினைத்து, தகுந்த ஆலோசனை கூறவும்.
எங்கள் தெருவில், நண்பர்கள் மத்தியில் நான் மட்டும் தான் கறுப்பாக இருக்கிறேன்; என் நிறம் மாற என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெளிவாகக் கூறுங்கள்.
ஆலிவ் ஆயில், ஸ்கின் கிரீம்கள் என, எல்லாவற்றையுமே பயன்படுத்தியும் பலன் இல்லை. அம்மா தயவு செய்து வாரமலரில் பதில் அனுப்பவும்.
- இப்படிக்கு,
அன்பு மகள்

அன்புள்ள மகளுக்கு,
நாடுகளின் சீதோஷணம், உணவு, நீர், மண் இவற்றை ஒட்டியும், மரபணுக்களைக் கொண்டும் மனிதர்கள் கறுப்பாய், பழுப்பாய், வெளிர் வெள்ளையாய், மஞ்சளாய் இருக்கின்றனர்.
இதில், நீ இத்தனை வருத்தப்பட ஒன்றுமே இல்லை. அழகு என்பது ஆரோக்கியத்திலும், புற உடல் உறுப்புகளை பேணுவதிலும், நடத்தையிலுமே உள்ளது. எங்கள் தெருவில் ஒரு பெண், நல்ல கறுப்பு; தெருப் பெண்மணிகள், 
அவள் காதுபடவே, 'இவ நிறத்துக்கெல்லாம் நுாறு பவுனு போட்டாக் கூட எவனும் கட்ட மாட்டான்...' என்றும், 'பூங்குயில்' என்கிற அவள் பெயரை,'கறுங்குயில்' என்று கூறி கேலி பேசுவர். அந்த இளம் பெண்ணோ, சிறு புன்சிரிப்புடன், அவர்களை அலட்சியப்படுத்தி சென்று விடுவாள். பள்ளியில் படிப்பு, விளையாட்டு, கைவேலை, பாடல், ஓவியம், பேச்சு, கட்டுரைப் போட்டி என, எல்லாவற்றிலும் அவள் தான் நம்பர் ஒன்! அதனால், ஆசிரியர்கள் மற்றும் மாணவியருக்கு அவளை ரொம்ப பிடிக்கும். பிளஸ் ௨ முடித்த பின், மேலே படிக்க வசதியில்லாமல் வீட்டில் இருந்த போது, அந்தத் தெரு பெண்மணிகளுக்கு அவள் தான் டெய்லர்; அவர்கள் குழந்தைகளுக்கோ டியூஷன் டீச்சர். அத்துடன், அந்தப் பெண்மணிகள் எங்காவது கடைக்கு, மார்க்கெட்டுக்கு செல்ல வேண்டுமென்றால், அவளிடம் தான் தங்கள் குழந்தையை விட்டுச் செல்வர்.
யாரெல்லாம் அவள் நிறம் குறித்து, ஏளனமாக பேசினார்களோ அவர்களே, அவளின் திறமையையும், நல்ல குணத்தையும் பாராட்டி, தலையில் துாக்கி வைத்து கொண்டாடினர். தொலைதுார கல்வி மூலம் பட்டப் படிப்பு முடித்து, தன் திறமையாலும், புத்திசாலித்தனத்தாலும், இன்று, ஒரு தனியார் நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் உள்ளார் அந்த பெண்மணி. அதனால், நிறம் குறித்து வருத்தப்படாதே! அவமதிப்புகளையும், பரிகாசங்களையும் தன்னம்பிகை படிக்கல்லாக நினை. அப்போதுதான் வாழ்வில் வெற்றி பெற்ற பெண்ணாக மிளிர முடியும்.
திராவிட நிறம் கறுப்பு; இந்தியர்கள், ஆங்கிலேயர்களிடம் அடிமையாக இருந்ததினால், வெள்ளை நிறத்தை ஆளும் நிறமாகவும், கறுப்பு நிறத்தை அடிமை நிறமாகவும் பொய் புனைவு செய்து உலகம் முழுவதும் பரப்பி வைத்தனர்.
கறுப்பு தான் நிறங்களின் தாய்; ஆதியில், பிரபஞ்சம் கறுப்பான இருட்டு சூன்யத்தில் நிலைத்திருந்தது. உலகப் புகழ் பெற்ற மாடல் நவோமி கேம்பெல் கறுப்பு தான். ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் எடி மர்பி, பல சாதனைகள் புரிந்த தடகள வீரர் உசேன் போல்ட், அமெரிக்க அதிபர் பாரக் ஓபாமா இவர்கள் எல்லாம் கறுப்பு தான். அதனால், தாழ்வு மனப்பான்மை காரணமாக, யாருடனும் நட்பு பாராட்டாமல் இருந்து விடாதே! நட்பு நிற பேதம் பார்ப்பதில்லை.
ஆரோக்கியமான கறுப்பு நிறம் கவர்ச்சிகரமானது. முகத்தில் தேமலோ, பனி பத்தோ, காயத் தழும்புகளோ இல்லாமல் பளபளப்பாக இருந்தால், அனைவரையும் ஈர்க்கும். சரியான உயரம், உயரத்திற்கு ஏற்ற பருமன். ஆரோக்கியமான தலைகேசம், இனிய குரல், நல்ல நடத்தையே ஒரு பெண்ணை அழகாக காட்டும்.
மகளே...மெலனின் அளவு குறைந்தால், வெண்புள்ளிகள் தான் உருவாகும். அதேபோன்று, கறுப்பை சிவப்பாக்குவதாக கூறும் விளம்பரங்களும், கிரீம்களும் பெரும்பாலும் பொய்யானவையே! அதற்குபதில், இரவில், ஆலிவ் எண்ணெய் உடல் முழுவதும் பூசி, காலையில், பயற்றமாவுபோட்டு குளி; தோலில் பளபளப்பு ஏறும். கை, கால் நகங்களை வெட்டி சீராக்கு. தலை கேசத்தை போஷாக்காய் பராமரி. பட்டப்படிப்புடன், தனிப்பட்ட திறமைகளையும் வளர்த்துக் கொள். உன்னை மணந்து கொள்ள, ஒரு நல்ல மாப்பிள்ளை வருவான்.
— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்

No comments:

Powered by Blogger.