Header Ads

யாரையும் சந்திக்க ஜெயலலிதா மறுப்பது ஏன்?

பெங்களூரு நகரில், ஒரு ஓரமாய் ஒதுங்கிக்கிடக்கிறது பரப்பன அக்ரஹார மத்திய சிறைச்சாலை. ஓசூர் போகும் சாலையில், எலக்ட்ரானிக் சிட்டிக்கு பக்கத்தில், ஐந்து கிலோ மீட்டர் உள்வாங்கி, நகரத்தின் நிழல் இன்னமும் சரியாக படாத கிராமிய சுழலில் அமைந்துள்ளது இந்த பகுதி.

கை காட்டுகின்றனர்: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறைக்குள் போகும் வரை, பலருக்கு இதன் விலாசத்தை சரிவர சொல்லத் தெரியவில்லை. ஆனால், இப்போது 'டிஎன்' என்ற தமிழ்நாடு பதிவு எண் கொண்ட வாகனத்தை பார்த்தாலே, எல்லாரும் எளிதாக இந்த சிறைப்பகுதியை கைகாட்டி விடுகின்றனர். சிறைக்கு போகும் பாதைக்கு ஒரு கிலோமீட்டர் தூரம் முன்பாகவே, போலீசார் தடுப்பு போட்டு, பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர். இதைத்தாண்டி தமிழக அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், மேயர்கள் உள்ளிட்டோர், 
தங்களது அடையாள அட்டையை காண்பித்து உள்ளே போய் வருகின்றனர். அப்படிப்போக முடியாதவர்கள், தடுப்புக்கு அந்த பக்கம் நின்று கொண்டு, 'தெரிந்தவர்கள் யாராவது வருகிறார்களா?' என்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.

என்ன நடக்கிறது? கடந்த ஐந்து நாட்களாக ஜெயலலிதாவை பார்க்க சென்றவர்கள்; யார், யார் பார்த்தார்கள்; சிறையின் உள்ளே என்ன நடக்கிறது என்பது அதிகாரபூர்வமாக தெரியாத நிலையில், ஊடகங்கள் தங்கள் யூகத்திற்கு ஏற்ப எழுதினர். ஆறாவது நாள், சிறை டி.ஐ.ஜி., வந்தார்; ஊடகங்களை அழைத்தார்; சில விஷயங்களை சொன்னார். அவர் சொன்னதில் இருந்து, ''ஜெயலலிதா உள்ளே போன நாள் முதல் இன்று வரை யாரையும் பார்க்கவில்லை; பார்க்கக்கூடாது என்பது இல்லை; ஆனால், பார்க்கவில்லை. இதற்கு, விருப்பம் இல்லாதது ஒரு காரணமாக இருக்கலாம் அல்லதுஅவர் தங்கியிருக்கும் செல்லில் இருந்து, அரை கிலோ மீட்டர் தூரம் நடந்து வர சிரமமாக இருக்கலாம். அடுத்ததாக, சிறையில் அவர் தங்கியிருக்கும் அறையில் ஒரு மின்விசிறி மட்டுமே உள்ளது. அவரது மருத்துவர்களின் ஆலோசனைபடி, ஒரு கட்டில் மட்டுமே கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது. உணவைப் பொறுத்தவரை மற்ற சிறைக் கைதிகளுக்கான உணவுதான் வழங்கப்படுகிறது. அவர் நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்றவைகளால் பாதிக்கப்பட்டிருப்பதால், மருத்துவர்களின் ஆலோசனைபடி கூடுதலாக சில உணவுகள் வழங்கப்படுகின்றன. சிறைத்துறை சட்டப்படி பார்வையாளர் நேரம், வேலைநாட்களில் காலை

Advertisement
10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை மட்டுமே. இவ்வாறு, அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டம்: ஆக, ஐந்து நாட்களாக போய்வந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், சிறைக்கு எதிரே உள்ள 'ஷாமியானா' பந்தலில், சும்மா உட்கார்ந்திருந்து விட்டு வந்தனர் என்பது தெரிந்தது. உள்ளே அனுமதி இல்லை என்று அவர்களுக்கு தெரியும்; ஆனால், தமிழகத்தில் இருந்தால், பார்ப்பவர்களுக்கும் விசாரிக்கிறவர்கள் அனைவருக்கும் பதில் சொல்ல வேண்டிவரும். மாறாக, இப்படி சிறை எதிரே காத்திருந்துவிட்டு வருவது எளிதாக இருந்திருக்கலாம். 

தொண்டர்கள் சென்னை, சேலம், கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து கிடைத்த வாகனங்களில் வருவதும், கறுப்பு சட்டை அணிவதும், மொட்டை போடுவதும், சாலையில் விழுந்து புரள்வதும், கோஷமிட்டு, ஆர்ப்பாட்டம் செய்து, கர்நாடக போலீசிடம் அடிவாங்குவதும், அழுது அரற்றுவதுமாக இருக்கின்றனர். முடிவு எதுவாக இருந்தாலும், இனி 7ம் தேதிக்கு பின்தான் என்பது தெரிந்த பின், இப்போது சிறைவாசல், வெகு சில போலீசுடன் வெறிச்சோடிப்போய் கிடக்கிறது. இப்போது உள்ள கேள்வி எல்லாம், 7ம் தேதி என்ன நடக்கும்? என்பதுதான்.
- நமது நிருபர் -

No comments:

Powered by Blogger.