Header Ads

ஜெயலலிதா சிறை வைக்கப்பட்டதால் அதிர்ச்சி: 14 நாளில் 154 பேர் உயிரிழப்பு

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் சிறை சென்று இன்றுடன் 14 நாட்கள் ஆகிறது.

ஜெயலலிதா திடீரென ஜெயிலில் அடைக்கப்பட்டதால் அ.தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த அதிர்ச்சி தாங்க முடியாதபடி இருந்ததால் பலர் உயிரிழக்க நேரிட்டது.

இதற்கிடையே ஜெயலலிதா மீது பற்றும், பாசமும் கொண்ட ஏராளமான அ.தி.மு.க.வினர் அவரை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தி தீ குளித்தனர். விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் பல அ.தி.மு.க.வினர் உயிரிழக்க நேரிட்டது.

இந்த நிலையில் ஜெயலலிதா கடந்த மாதம் 27–ந் தேதி ஜெயிலில் அடைக்கப்பட்ட நாள் முதல் இதுவரை தமிழ்நாடு முழுவதும் 154 பேர் அவருக்காக உயிரிழந்து இருப்பதாக அ.தி.மு.க. தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது. உயிரிழந்த 154 பேர் பெயர் விபரத்தை மாவட்ட வாரியாக அ.தி.மு.க. வெளியிட்டுள்ளது.

154 பேரும் ஜெயலலிதாவுக்காக எப்படி மரணம் அடைந்தனர் என்ற தகவலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்ட தகவல் அறிந்ததும் 113 பேர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக தெரிய வந்துள்ளது.

மேலும் 14 அ.தி.மு.க. தொண்டர்கள் தீக்குளித்து உயிரிழந்தனர். 15 பேர் தூக்குப் போட்டு தற்கொலை செய்தனர்.

அது போல ஜெயலலிதா விடுவிக்கப்படவில்லை என்பதை அறிந்ததும் 7 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. ஒரு அ.தி.மு.க. பிரமுகர் பஸ் முன்பு பாய்ந்து தற்கொலை செய்தார்.

இரண்டு பேர் ஓடும் ரெயில் முன் பாய்ந்து உயிர் விட்டதாக அந்த பட்டியலில் கூறப்பட்டுள்ளது. மேலும் 2 பேர் அம்மாவுக்காக உயிரையும் கொடுக்கத் தயார் என்று கூறி குளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்ட முதல் ஒரு வாரத்துக்கு தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். உண்ணாவிரதம், கடையடைப்பு போன்றவை நடத்தப்பட்டன.

இத்தகைய போராட்டங்களால் தமிழ்நாட்டில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் சார்பில் சரமாரியாக குற்றச்சாட்டுக்களும் விமர்சனங்களும் எழுப்பப்பட்டன. இந்த சர்ச்சையைத் தொடர்ந்து போராட்டங்கள் நடத்துவதை தற்போது அ.தி.மு.க.வினர் கைவிட்டுள்ளனர்.

இதையடுத்து ஜெயலலிதா விரைவில் விடுதலை பெற வேண்டி கோவில்களில் அ.தி.மு.க. பிரமுகர்கள் சிறப்பு வழிபாடுகளை நடத்தி வருகிறார்கள். ஜெயலலிதா பெயருக்கு அர்ச்சனைகள் செய்யப்பட்டு வருகின்றன.

இது தவிர ஜெயலலிதா ராசி மற்றும் நட்சத்திரப்படி பழமையான கோவில்களில் பரிகார பூஜைகளும் செய்யப்பட்டு வருகின்றன. ஜெயலலிதா உத்தரவைத் தொடர்ந்து பெங்களூர் சிறைப் பகுதிக்கு செல்வதைத் தவிர்த்துள்ள அ.தி.மு.க. நிர்வாகிகள், அதற்கு பதில் கோவில்களில் பூஜைகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறார்கள்.

No comments:

Powered by Blogger.