Header Ads

ஜெயலலிதா கைது உண்ணாவிரதம்: ரஜினி, கமல், அஜீத், விஜய், டைரக்டர் ஷங்கர் வருவார்களா...?

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனைக்கு வருத்தம் தெரிவித்தும், அவர் விரைவில் வெளி வரவேண்டும் எனக் கோரியும் இன்று தமிழ் திரையுலகம் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளது. காலை 9 மணிக்குத் தொடங்கிய இந்த உண்ணாவிரதத்தில், திரைத்துறையைச் சேர்ந்த பல்வேறு சங்கங்கள் பங்கேற்றுள்ளன. சங்க நிர்வாகிகளாக இருப்பவர்கள் பங்கேற்றுள்ளனர். ஆனால் முன்னணி நடிகர் நடிகைகள், இயக்குநர்கள் இன்னும் பங்கேற்கவில்லை. உண்ணாவிரதம் என்பது காலையில் ஆரம்பித்து, மாலை வரை தொடர்ச்சியாக அமர்வது. ஆனால் சமீப காலமாக நடக்கும் திரையுலக உண்ணாவிரதங்கள் ஒரு சடங்காக மாறிவிட்டன. உண்ணாவிரதம் ஆரம்பிக்கும்போது வருபவர்கள், சிறிது நேரம் கேமராக்களுக்கு முகம் காட்டிவிட்டு, பாதியில் கிளம்பிவிடுவதைப் பார்க்க முடிகிறது. குறிப்பாக முன்னணியில் உள்ள இளம் கலைஞர்கள், வந்த வேகத்தில் கிளம்பிவிடுவது சகஜமாகிவிட்டது. ரஜினி, கமல், சரத்குமார் போன்ற மூத்த கலைஞர்கள் மட்டுமே, காலை முதல் மாலை வரை உண்ணாவிரதத்தில் பங்கேற்கின்றனர். இன்றைய உண்ணாவிரதத்துக்கு இந்த முன்னணிக் கலைஞர்கள் வருவார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது. ரஜினிகாந்த் தனது லிங்கா படத்துக்காக ஹைதராபாதில் முகாமிட்டுள்ளார். படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக சொல்லப்பட்டாலும், இன்னும் அவர் அங்கிருந்து கிளம்பவில்லை. கமல் உடல்நலமின்றி சிகிச்சைப் பெற்று வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவரால் இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்க முடியுமா தெரியவில்லை. விஜய் தனது கத்தி படத்தின் பாடல் காட்சி படப்பிடிப்புக்காக மும்பையில் முகாமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அஜீத் அவரது நிகழ்ச்சிகளுக்கே கூட வருவதில்லை. முதல் நிலை நடிகைகளில் நயன்தாரா மட்டும் சில நேரங்களில் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு வருவார். மற்ற முன்னணி நடிகைகள் பெரும்பாலும் வருவதே இல்லை. இந்த உண்ணாவிரதத்தை ஆட்சியாளர்கள் உற்று கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு தெரிந்துவிடும், யார் யார் அட்டென்டன்ஸ் கொடுக்கப் போகிறார்கள், ஆப்சன்ட் ஆகப் போகிறார்கள் என்பது!

No comments:

Powered by Blogger.