Header Ads

ஜெயலலிதாவுக்கு சிறை; தீக்குளித்த மதுரை பள்ளி மாணவி உயிரிழப்பு

ஜெயலலிதாவுக்கு சிறைத்தண்டனை வழங்கியதால் அதிர்ச்சியடைந்து தீ குளித்த மதுரை பள்ளி மாணவி உயிரிழந்தார். 

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு கர்நாடக நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது. மேலும் ஆங்காங்கே அ.தி.மு.க. தொண்டர்கள் தற்கொலை செய்தும், தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டும் வருகின்றனர்.  மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா எழுமலையை அடுத்த வங்கிநாராயணபுரத்தை சேர்ந்த முருகன் என்பவரின் மகள் நாகலட்சுமி (வயது 17). இவர் எழுமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்–2 படித்து வருகிறார்.

ஜெயலலிதாவுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட செய்தியை அறிந்தது முதல் நாகலட்சுமி மிகுந்த வேதனையுடன் இருந்து வந்தார். ஞாயிற்றுக் கிழமை காலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, நாகலட்சுமி தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனால் வேதனை தாங்கமுடியாமல் அலறியபடியே தெருவில் ஓடிய அவரை, அந்த பகுதியினர் மீட்டு உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து எழுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

மதுரை மருத்துவமனையில் 80 சதவீதம் எரிந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த மாணவி நாகலட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இன்று காலை 9.15 மணிக்கு உயிரிழந்தார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மாணவி நாகலட்சுமி, ஜெயலலிதா அரசு அறிமுகம் செய்த இலவச சைக்கிள், லேப்டாப் போன்ற நலத்திட்டங்களால் பயன் அடைந்தவர். இந்நிலையில் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதில் மனவேதனை அடைந்து தீ குளித்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Powered by Blogger.