Header Ads

25 ஆண்டுகளுக்கு பின் இணைந்த குடும்பம்: மனைவி-மகள்களுடன் நெகிழ்ச்சியான சந்திப்பு

25 ஆண்டுகளுக்கு முன் பிரிந்த கண்டக்டர் குடும்பம் ‘தினத்தந்தி'யில் வெளியான செய்தியால் இணைந்தது. மனைவி-மகள்களுடனான அவரது  சந்திப்பு நெகழ்ச்சியாக இருந்தது. 

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் இரவு 2 கால்களும் இல்லாத மாற்றுத்திறனாளி ஒருவர் சிகிச்சை பெறுவதற்காக வந்தார். அவரை ஒரு ஆட்டோ டிரைவர் அழைத்து வந்தார். துணைக்கு ஒருவர் இருந்தால் தான் சிகிச்சை அளிக்க முடியும் என ஆஸ்பத்திரி நிர்வாகம் மறுத்து விட்டது. பின்னர் ஆட்டோ டிரைவர் அவருக்கு துணையாக இருப்பதாக கூறியதைத்தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 

அப்போது அவர் தனது பெயர் பாலசுப்பிரமணியம் என்றும், தனக்கு யாரும் இல்லை என்றும் தான் அனாதை என்றும் கூறி இருந்தார். அவர் சிகிச்சை பெற ஆஸ்பத்திரியில் நடந்த போராட்டம் பற்றிய செய்தி படத்துடன் ‘ தினத்தந்தி'யில் வெளியானது.   அந்த செய்தியை பார்த்த அவருடைய மனைவி சாரதா, மகள்கள் தமிழ்ச்செல்வி மற்றும் தேவி ஆகியோர் உறவினர்களுடன் நேற்று ஆஸ்பத்திரிக்கு வந்தனர். 

அப்போது தான்  பாலசுப்பிரமணியன் அனாதை இல்லை என்றும் அவர் தனது குடும்பத்தை விட்டு 25 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்று வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்ததும் பின்னர்  விபத்தில் கால்களை இழந்ததால் அவரை 2-வது மனைவி விரட்டி  இருப்பதும் தெரியவந்தது. 

25 ஆண்டுகளுக்கு முன் மனைவி பிள்ளைகளை  பார்த்து பாலசுப்பிரமணியம் ஆனந்த கண்ணீர் விட்டார். அப்போது அவரது மனைவி மற்றும் மகள்கள் நாங்கள் இருக்கும்போது ஏன்? அனாதை என்று கூறுகிறீர்கள். ஏன்? எங்களிடம் வரவில்லை என்று உரிமையுடன் கேட்டனர். அதற்கு அவர் 2 கால்களை இழந்து விட்டேன். 

நான் உங்களுக்கு செய்த துரோகத்துக்கு தண்டனை அனுபவிக்கிறேன். இனி உங்களிடம் வந்திருந்து உங்களை மேலும் சிரமப்படுத்தமாட்டேன் என்று அவர் தேம்பி அழுதார். அவரை மகள்களும் உறவினர்களும் தேற்றினார்கள். 25 ஆண்டுகளுக்கு முன் மனைவி-மகள்களை பிரிந்த பாலசுப்பிரமணியம் குடும்பம் தினத்தந்தி செய்தியால் இணைந்த காட்சி நெகிழ்ச்சியாக இருந்தது. 

மனைவி மற்றும் மகள்களை பாலசுப்பிரமணியம் பிரிந்து சென்றது பற்றிய விவரம் வருமாறு:- 

பாலசுப்பிரமணியத்தின் சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் ஆகும். அவர் பிறந்த 3-வது மாதத்தில்  சென்னையில் இருந்த தங்கைக்கு அவரது தந்தை தத்து கொடுத்து விட்டார். சென்னையில் பஸ் கண்டக்டராக பணியாற்றிய அவர் கோபியை சேர்ந்த முறைப்பெண்ணான சாரதா என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் பிறந்தனர். 

இந்தநிலையில் பாலசுப்பிரமணியத்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பால் மனைவி-மகள்களை சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு விரட்டினார். அவர்கள் ஈரோடு வந்து வாழ்ந்து வந்தனர். சாரதா ஒரு மகளுக்கு திருமணம் செய்து வைத்தார். 

சென்னையில் பழகிய பெண்ணை 2-வது திருமணம் செய்த, அவர் 2 குழந்தைகளை தத்து எடுத்து வளர்த்தார். பின்னர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற, அவர் கடந்த 2010-ம் ஆண்டு விபத்தில் சிக்கி 2 கால்களை இழந்தார். இந்த நிலையில் அவரை 2-வது மனைவி மற்றும் பிள்ளைகள் வீட்டை விட்டு விரட்டினர்.

இந்த நிலையில்தான் அவர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டபோது அவர் அனாதை என்று கூறியதாக வெளியான  ‘தினத்தந்தி' செய்தியால் பிரிந்த அவரது குடும்பம் இணைந்தது.

No comments:

Powered by Blogger.