Header Ads

அன்புடன் அந்தரங்கம்!

அன்பு அம்மாவுக்கு, என் வயது 38; என் கணவருடைய வயது 51. இருவரும் காதல் திருமணம் செய்து, 19 ஆண்டுகள் ஆகின்றன. இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். நான் பட்டப்படிப்பு படித்தவள். அவர் மூன்று டிகிரி வாங்கி, தனியார் கம்பெனியில் வேலை செய்கிறார். ஓரளவு மனத்திருப்தியுடன் எங்கள் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. நான் வாரந்தவறாமல், வாரமலர் இதழில் வெளியாகும், அன்புடன் அந்தரங்கம் பகுதியை படிக்கும் பழக்கமுள்ளவள்.
என் கணவர், நல்லவர் என்று தான் இதுவரை நினைத்திருந்தேன். அவர், அவரது தம்பி மனைவியுடன் நன்றாக பேசுவார். அவள் எப்போதாவது வந்து செல்வதுண்டு. நானும் கண்டு கொள்வதில்லை. 
தற்போது என் கணவர் அவளுடன் தவறாக நடந்துள்ளார் என்பதை ஊர்ஜிதமாக கண்டுபிடித்து, அது குறித்து, அவரிடம் கேட்டேன். அவர் இல்லை என்று சத்தியம் செய்தார். பின், 'நீ சொல்கிறாய் என்பதற்காக, ஆமாம் என்றேன். ஊர் உலகத்தில் இல்லாததா நடந்து விட்டது. இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்ற... தம்பி மனைவி தானே, (தம்பி தற்போது வெளியூரில் வேலை செய்கிறார்.) கண்டுக்காம போயேன்...' என்கிறார். 
அவளும் இப்படி நம்பிக்கை துரோகியாக இருப்பாள் என்று, நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை. அவளிடம் கேட்டதற்கு, 'இல்லை...' என்கிறாள். அவளது இரு குழந்தைகள் மற்றும் முத்துமாரியம்மன் சாமி மேல சத்தியமாக எதுவும் நடக்கவில்லை என்று, அவளை சொல்ல வைக்கணும்ன்னு ஆசை. ஆனால், இவ்விஷயம் வெளியில் தெரிந்து, என் கணவரின் கவுரவம் போய்விடுமோ என்ற பயம் வேறு உள்ளது. என் கணவர் முதலில், குழந்தைகள் மீது சத்தியம் செய்தார். இப்போது உண்மையை கூற தயங்குகிறார். 
நான், உங்களின் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நான், அவளிடம் கேட்க நினைப்பதை கேட்டுவிட்டு, உறவை துண்டித்து விடவா? அவளாகவே, எங்கள் வீட்டுக்கு வருவதால் தான், இந்த மாதிரி நடந்திருக்கு. நான் விவசாயம் சம்பந்தமாக, தினமும் வெளியில் சென்று வருவேன்.
அவள் பார்க்க கருப்பாக இருப்பாள். நான் நல்ல சிவப்பு. அவள் அரை குறையாக ஆடை அணிவதுடன், அதிகமாக மேக்-அப்பும் போடுவாள். நான் அடக்கமான உடையை தான் அணிவேன். அதுதான் என் கணவருக்குப் பிடிக்கும். உண்மையை இருவருமே ஒப்புக்கொண்டால், நிச்சயம் மன்னிப்பேன்.
என் கணவர் மற்றும் அவளுடைய விஷயத்தில் நான் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்த உங்கள் பதிலை, ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். என் குழந்தைகளை நினைத்து, தற்கொலை எண்ணத்தை தவிர்க்கிறேன்.
— இப்படிக்கு உங்கள் மகள்.

வார வாரம், 'அன்புடன் அந்தரங்கம்' பகுதியை வாசிப்பதாக எழுதியுள்ளாய். எல்லாருடைய பிரச்னைகளையும், விழுந்து விழுந்து படித்து, நமக்கு இப்படி பிரச்னை இல்லையே என, ஏங்கியிருக்கிறாய். அதன் விளைவாக, உன் கணவருக்கும், அவரது தம்பி மனைவிக்கும் இடையே ரகசிய தொடர்பு இருக்குமோ என, சந்தேகப்படுகிறாய்.
இருவருக்கும் இடையே ஆன, ரகசிய தொடர்பை எந்த வழியில் கண்டுபிடித்தாய் என, நீ உன் கடிதத்தில் குறிப்பிடவில்லை. பொதுவாக, காதல் திருமணம் செய்து கொண்ட பெண்மணிகள், மிகவும் சுயநலம் மிக்கவர்களாயும், தன்னை கவர்ந்தவன், பிற பெண்கள் யாரையும் கவர்ந்து விடக் கூடாது என்கிற எண்ணம் உள்ளவர்களாகவும் இருப்பர். எனக்குத் தெரிந்த, காதல் திருமணம் செய்து கொண்ட ஒரு தம்பதியரில், கணவன் மாறுகண் உள்ளவராகவும், குண்டாகவும், கறுப்பாகவும், மிகவும் வயோதிக தோற்றத்துடன் இருப்பார். அவர், அடுத்தவளை செட்டப் செய்து விடுவார் என, அந்த பெண்மணி தினமும் நொடிக்கு நொடி பதறுவார். சரி உன் விஷயத்துக்கு வருவோம்...
ரகசிய தொடர்பு இல்லை என, சத்தியம் செய்த உன் கணவன் பின், 'நீ சொல்வதற்காக ரகசிய தொடர்பு உண்டு' என்கிறார் என்றால், அது, உன்னை வெறி ஏற்றுவதற்காக, உன்னை பரிகாசம் செய்வதற்காகக் கூட கூறியிருக்கலாம்.
கணவரின் தம்பி மனைவியை, அவளது இரு குழந்தைகள் மீதும், சாமி மீதும் சத்தியம் செய்தால், உனக்கு நம்பிக்கை ஏற்படும் என்கிறாய். தம்பி மனைவி கறுப்பு, ஓவர் மேக்கப் போடுபவள். நீயோ சிவப்பு, குடும்ப குத்துவிளக்கு என்கிறாய். உன் ஓரவஞ்சகமான ஒப்பீடு, அந்தப் பெண்மணி மீது, உனக்கு உள்ள அசூயை கலந்த பொறாமையை காட்டுகிறது.
மகளே...படித்த பெண்ணான நீ, ஒரு பெண்ணை சந்தேகத்தின் பேரில் குற்றம் சாட்டுவது தவறு என்று படவில்லையா? ஒரு வேளை அந்தப் பெண் ஒழுக்கமான பெண்ணாக இருந்திருந்து, உன் சந்தேகத்தால் அவள் வாழ்வு பாதிக்கப்பட்டால், அதற்கு நீ பொறுப்பேற்பாயா? அல்லது உன் வாழ்க்கையை அந்தப் பெண்ணிற்கு விட்டுக் கொடுப்பாயா? என்ன பெண்ணம்மா நீ? சந்தேகத்திலும், யூகத்தினாலும் ஒருவரை குற்றம் சாட்டுவது கொலைக் குற்றத்திற்கு சமமானது என்று உனக்கு தெரியவில்லையா? உன்னுடைய இந்த சந்தேகத்தால், உன் குடும்பம் மற்றும் அந்தப் பெண்ணின் குடும்பம் என, இரு குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரின் வாழ்க்கையும் பாதிக்கப்படுவதுடன் உங்கள் பிள்ளைகளின் மனமும் பாதிக்கப்படும்.
உண்மையில் உன் கணவர் தவறு செய்திருந்தால், உன்னுடைய இந்த செயல்பாட்டினால், இருவருக்கும் பயம் விட்டுப்போக வாய்ப்பிருக்கிறது. உனக்குத்தான் தெரிந்துவிட்டதே என, அவர்கள் தங்கள் தொடர்பை வெளிப்படையாக தொடங்குவர். அப்போது நிலைமை இன்னும் மோசமாக போகும். அதனால், முதலில், நீ கற்பனை செய்திருக்கும் கள்ள உறவு உண்மையா என, கண்டுபிடி. உன் கணவர் மற்றும் அந்தப் பெண்ணின் நடவடிக்கைகளை கவனி.
உன் யூகம் சரி எனும் பட்சத்தில், தயவு தாட்சணை இன்றி, உன் கணவரின் தம்பி மனைவியுடனான உறவை, எல்லா வகையிலும் கத்திரித்து விடு. ஆனால், அது வெறும் சந்தேகமாகவே மட்டும் இருந்தால், வீண் பழியைச் சுமத்தி, ஒரு பெண்ணின் வாழ்வை கெடுத்து விடாதே. அதற்கு பதில், நாசூக்காக, அவர்கள் இருவருடைய காதில் விழும் படி, கள்ளத் தொடர்பால் சீரழிந்து போன குடும்பங்களை பற்றி பொதுவாக பேசுவது போல் பேசு.
அது தவறு செய்ய நினைப்பவரையும், யோசிக்க வைக்கும்.
உன் கணவனும், அவரது தம்பி மனைவியும் சந்திக்கும் சந்தர்ப் பங்கள் அமையாமல் பார்த்து கொள். படுக்கையில்திகட்ட திகட்ட திருப்தி படுத்து. உனக்கும், உன் கணவனுக்கும் நடந்த, காதல் பிளாஷ் பேக்கை அவ்வப்போது, உணர்ச்சிபூர்வமாக விவரி. கணவருக்கு, விருப்பமான அயிட்டங்களை சமைத்து ஆசையாய் பரிமாறு.
குடும்பத்துடன் மினி சுற்றுலா போ. இது, எல்லாவற்றுக்கும் மேலாக, உன் சந்தேகம் பொய்யாக போகட்டும் என, இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.
வியாதிகளை பற்றி படித்து படித்து, வியாதியஸ்தி ஆகிவிடாதே!

No comments:

Powered by Blogger.