Header Ads

பேஸ்புக்'கில் விமர்சனம்: பதிலடிக்கு தே.மு.தி.க., தயார்

பேஸ்புக்'கில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை, கேலிச் சித்திரம் வரைந்தும், கேலியாக கருத்துக்களை பதிவு செய்வது அதிகரித்து வருவதால், அதற்கு பதிலடி கொடுக்க, தே.மு.தி.க., வட்டாரம் தயாராகி வருகின்றது.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின், சட்டசபை செயல்பாடுகள், லோக்சபா தேர்தல் பிரசாரம், மேடைப் பேச்சு, பத்திரிகையாளர்களிடம் அவர் நடந்து கொள்ளும் முறை ஆகியவற்றை, 'பேஸ்புக், டுவிட்டர், கூகுள்' போன்ற சமூக வலைத்தளங்களில், கடுமையாக கேலி செய்து வருகின்றனர்.இது, தே.மு.தி.க.,வினருக்கு கடுமையான மனவருத்தத்தை ஏற்படுத்தி இருப்பதாக, அக்கட்சி வட்டாரங்கள் சொல்கின்றன. அதனால், சமூக வலைத்தளங்களில், கேலி செய்யும் நபர்களுக்கு சரியான பதிலடி கொடுப்பது குறித்து, கட்சித் தலைமைதீவிரமாக ஆலோசித்து வருகிறது.இந்நிலையில், திருச்சி மற்றும் சேலம் மாவட்டம் ஆத்தூரில், தே.மு.தி.க., சார்பில், 'பேஸ்புக்'நண்பர்கள் கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில், 2014 லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க., தோல்வி, ஓட்டு சதவீதம் குறைவு போன்றவை குறித்து தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கையை வைத்து, விவாதம் செய்தனர்.இந்த ஆய்வறிக்கை, மே, 18 முதல் ஜூன், 20ம் தேதி வரை, தமிழகத்தில் உள்ள, தே.மு.தி.க., பேஸ்புக் நண்பர்கள், வெளி மாநிலங்களில் வசிக்கும், தே.மு.தி.க.,வினரிடம் கருத்து கேட்டும், பொதுமக்கள், மாணவர்கள், மாற்றுக் கட்சியினர் ஆகியோரிடம் கருத்து கேட்டும், ரகசியமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை, பேஸ்புக்கில் தவறாக விமர்சிப்பவர்களுக்கு, எவ்வாறு பதிலடி கொடுக்க வேண்டும் என்பது குறித்தும், சிலர் ஆலோசனை வழங்கினர். இனிவரும் காலங்களில் தே.மு.தி.க., வளர்ச்சிக்கு, இணைய தளம், சமூக வலைத்தளம் செயல்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்தும்விவாதித்தனர். இறுதியில், லோக்சபா தேர்தல் தோல்வி குறித்து தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கையை, கட்சி தலைமை யிடம் வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத் தில் தமிழகம் முழுவதிலும் இருக்கும் கட்சியின் பேஸ்புக் ஆர்வலர்கள் பங்கேற்றனர்.இதனால், சமூக வலைத்தளங்களில் தே.மு.தி.க., மற்றும் விஜயகாந்த் குறித்து யாரும் விமர்சித்து கருத்து சொன்னால், அந்த கருத்தை பதில்கருத்துக்களால் எதிர் கொள்ள, பெரும் படை ஒன்று, தே.மு.தி.க.,வில் உருவாக்கப்பட்டிருக்கிறது.இது சமூக வலைத்தள வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

No comments:

Powered by Blogger.