Header Ads

அன்புடன் அந்தரங்கம்!

என் வயது, 33; கணவர் வயது, 42. எனக்கு, 18 வயதில் திருமணம் நடந்தது. எங்கள் திருமணம் முடிந்து, 15 ஆண்டுகள் ஆகி விட்டன. 12 வயதில், ஒரு ஆண் குழந்தையும், ஐந்து வயதில், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். திருமணமான, 10 ஆண்டுகள் மிகவும் சந்தோஷமாக, எல்லாரும் பொறாமைப்படும்படி வாழ்ந்தோம். என் கணவர் மிகவும் நல்லவர்; எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர். டீ, காபி கூட, கடையில் குடிக்க மாட்டார். அப்படி ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வெளியில் குடித்தால் கூட, வீட்டிற்கு வந்தவுடன் என்னிடம் சொல்லி விடுவார்.
எந்த சிறு விஷயத்தையும் என்னிடம் மறைத்ததில்லை. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில், (அதாவது, இரண்டாவது குழந்தை பிறந்த பின்) பிரச்னை ஆரம்பமானது. இப்போது எல்லாமே தலைகீழாக உள்ளது. அதற்கு நான் தான் காரணம். அவர் செக்சில் அதிக ஈடுபாடு உள்ளவர். இரவில் கொஞ்சம் கவர்ச்சியாக ஆடை அணியும்படி என்னை கட்டாயப்படுத்துவார். அதற்கு நான் சம்மதிக்காத காரணத்தால், எங்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை வரும். சில சமயங்களில் நான், 'கவர்ச்சியா இருக்கிறவளிடம் போக வேண்டியது தானே; என்னை ஏன் கட்டாயப் படுத்துகிறீர்கள்...' என்று, சண்டை போடுவேன். அதற்கு அவர், 'டீ, காபி கூட வீட்டில் தான் சாப்பிட வேண்டும் என்று நினைப்பவன் நான்; அப்படிப்பட்ட என்னை மிகவும் மோசமாக திட்டுகிறாய்...' என்று, சொல்வார்.
இந்த பிரச்னை கொஞ்சம், கொஞ்சமாக அதிகமாகி, இப்போது, நான்கு ஆண்டுகளாக என்னை தொடுவது இல்லை. முன்பெல்லாம், வாரத்துக்கு நான்கு நாட்கள் தாம்பத்தியத்தில் ஈடுபடுவோம். இப்போது, நான்கு ஆண்டுகள் ஆகியும் என்னை தொடவில்லை. முன்பெல்லாம் இரவு, 7:00 மணிக்கு, வீட்டிற்கு வந்தவுடன், இரண்டு குழந்தைகளிடமும் தூங்கும் வரை, கதை சொல்லி விளையாடுவார்.
இப்போது, குழந்தைகளை பார்த்தாலே எரிந்து விழுகிறார். இரண்டு ஆண்டுகளாக தினமும் குடித்து விட்டு, 10:00 மணிக்கு மேல் தான், வீட்டிற்கு வருகிறார். ஓட்டலில் சாப்பிட்டு விட்டு, வீட்டிற்கு வந்த உடன், தூங்கி விடுகிறார். குழந்தைகளிடம் பேசுவதே இல்லை; குழந்தைகள் இருவரும் என்னிடம், 'அப்பா ஏன் இப்படி இருக்கிறார்; நாங்கள் ஏதேனும் தப்பு செய்து விட்டோமா?' என்று, என்னை கேட்கின்றனர். அவர்களிடம் என் பிரச்னையை சொல்லி, புரிய வைக்க முடியாது. இதனால் அடிக்கடி, தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் வருகிறது.
மிகவும் நல்லவராகவும், குடும்ப பொறுப்புள்ளராகவும் இருந்த என் கணவரை, இந்த மோசமான நிலைக்கு தள்ளியதற்கு நான் தான் காரணம். இதை நினைக்கும் போது, என் மனம் வேதனைப்படுவதுடன், அவர் வேலை செய்யும் அலுவலகத்தில், வேறு யாரிடமாவது தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகமும் வருகிறது. அதற்கு காரணம், அவர் முன்பு சண்டை வரும் போது, 'கவர்ச்சியான பெண்ணோட தொடர்பு மட்டும் கிடைத்து விட்டால், உன்னை சாகும் வரை தொட மாட்டேன்...' என்று, அடிக்கடி கூறுவார். கடந்த மாதம் விவாகரத்து கேட்டு, வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதை படித்ததும், அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு அழுதேன். அதற்கு எந்த பதிலும் சொல்ல மறுத்து விட்டார். இந்த சங்கடமான நிலையில் தான், உங்களின் ஆலோசனை தேவை. நீங்கள் எனக்கு நல்ல முடிவை சொல்லவும்.
— இப்படிக்கு,
உங்கள் அன்பு மகள்.

அன்புள்ள மகளுக்கு
உன் கணவர் அதிகம் சினிமா பார்ப்பார் என, நினைக்கிறேன். சினிமாக்களில் வரும் கவர்ச்சி நடிகைகளை போல, தன் மனைவியும் இரவில் தோற்றமளிக்க வேண்டும் என, எண்ணியிருக்கிறார். பத்து ஆண்டு தாம்பத்தியத்தில், இரு குழந்தைகளை பெற்ற பின், உன் இளமை தளர்ந்திருக்கக் கூடும். அதை சரிகட்ட உன் கணவன், உன்னை கவர்ச்சியாய் உடை உடுத்த சொல்லியிருப்பார். உன் கணவன் பணிபுரியும் அலுவலகத்தில் செக்சியாய் ஆடை உடுத்தும் பெண்மணி யாராவது இருந்திருப்பாள். அவளை மனதிலிருந்து அகற்றுவதற்காக, உன்னை அவ்வாறு ஆடை அணிய சொல்லியிருக்கலாம். பதினைந்து ஆண்டு தாம்பத்யம் செய்த, எந்தக் குடும்பப் பெண்ணும், எளிமையாகத் தான் இருப்பாள். ஆபாசமாய் ஆடை அணியச் சொல்லும் கணவனை எதிர்த்து வாதாடவே செய்வாள்.
வாரத்திற்கு நான்கு நாட்கள், உன்னுடன் தாம்பத்யம் வைத்துக் கொள்ளும் கணவர், உன் உதாசீன பேச்சால், வெந்து, நொந்து போயிருக்கிறார். தன் ஆசைகளுக்கு வடிகால் அமைத்து தராத மனைவியை பழி வாங்க முடிவு செய்திருக்கிறார். அந்த பழி வாங்கலின் ஒரு பகுதி தான் உன்னை, நான்கு ஆண்டுகளாய் தொடாதது. அஸ்தமனத்தில் கூடு அடையும் பறவையாய் இருந்த உன் கணவர், ஆந்தை போல், இரவில் சுற்ற ஆரம்பித்திருக்கிறார்.
பழி வெறி மண்டிப்போய், குடிப்பழக்கம் ஆரம்பித்திருக்கிறது. அவரின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு அலுவலகத்திலேயோ, நண்பர்கள் மூலமோ அறிமுகமான பெண்ணிடமோ, உன் கணவனுக்கு தகாத உறவு துளிர்த்தும் இருக்கலாம். ஆசை நாயகி உன்னை கத்தரித்து விடச்சொல்லி, உன் கணவனுக்கு தூபம் போட்டு இருப்பாள். அவளை திருப்திப்படுத்த, உனக்கு விவாகரத்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.
யானை தன் தலையில் தானே மண்ணை வாரி கொட்டிக் கொண்டது போல, வேண்டாத வார்த்தைகளை கணவனின் மீது வீசி, 15 ஆண்டு திருமண வாழ்க்கையை, நீயே சீர் குலைத்துள்ளாய்.
இனி, நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
உன் கணவரிடம் இப்படிப் பேசு...
'பனிரெண்டு வயது மகன் இருக்கும் வீட்டில், கவர்ச்சியாய் ஆடை அணிந்து உலாத்துவது, ஒரு தாய்க்கு லஜ்ஜையாக இருக்காதா? குழந்தைகளின் எதிர்காலத்துக்காக காமம் சார்ந்த அதீத கற்பனைகளை, நாம் சுருக்கிக் கொள்ள வேண்டும் என, நான் நினைத்தது தவறா? இந்த விஷயங்களை எல்லாம் நாசூக்காய் சொல்லி, உங்களுக்கு விளக்காமல், நான் சண்டை போட்டது தவறு தான்.
'இத்தனையும் மீறி நான் கவர்ச்சி ஆடை அணிவது தான், உங்களுக்கு முக்கியம் என்றால், அதையும் உங்களுக்காக அணிந்து தரிசனம் தருகிறேன். 15 ஆண்டுகள் உங்களையே நினைத்து, உங்களுக்காகவே வாழும் என் மீது, துளியும் காதல் இல்லையா... நாம் விவாகரத்து செய்து கொண்டால், நம் இரு குழந்தைகளின் எதிர்காலம் பாழாகுமே என்று நினைத்து பார்த்தீர்களா...' என்று மென்மையாக கேட்டு, உன் தரப்பு நியாயங்களை, பொறுமையாக, உன் கணவர் நல்ல மூடில் இருக்கும் போது விளக்கு.
உன் கணவரின் அலுவலகத்தில், சக்களத்தி யாராவது வேலை பார்க்கிறாளா என, வேவு பார். அப்படி, யாராவது இருந்தால், இரு குடும்பத்து பெரியவர்களிடம் கூறி, அவர்களை விட்டு, அவளிடம் பேச சொல்லி, தொடர்பை துண்டிக்கச் செய்.
தற்கொலை எண்ணத்தை தவிர்... உன் கணவனை, உன் வழிக்கு கொண்டு வர என்னென்ன உபாயங்கள் இருக்கின்றனவோ, அத்தனையும் கையாளு. கணவனிடம் முழு சரணாகதி அடையாமல், மிடுக்காய் நடந்து, கணவனை மீட்டெடு. கணவனின் விவாகரத்து நோட்டீசுக்கு, சேர்ந்து வாழவே விரும்புவதாக பதில் கொடு; கவலைப்படாதே.
— என்றென்றும் தாய்மையுடன்,

No comments:

Powered by Blogger.