Header Ads

2016 சட்டசபை தேர்தல் இலக்கு:மீண்டும் துளிர்விடும் விஜய் அரசியல் ஆசை

லோக்சபா தேர்தல் முடிவுகள், அகில இந்திய அளவில் பா.ஜ., கூட்டணிக்கு ஆதரவாக வந்திருப்பதைத் தொடர்ந்து, நடிகர் விஜய் ரொம்பவும் சந்தோஷமாகி விட்டார். கொஞ்ச காலம், தமிழகத்தில் அரசியல் சூழ்நிலைகள் சரியில்லாததால், தன்னுடைய அரசியல் செயல்பாடுகளை அமுக்கிப் போட்டிருந்த அவர், மீண்டும் எதிர்கால திட்டத்துடன், பல்வேறு காரியங்களில் இறங்கி இருப்பதாக, அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் செய்தி பரவி இருக்கிறது.

கருத்து வேறுபாடு


இது தொடர்பாக, விஜய் ஆதரவாளர்கள் வட்டாரங்களில் கூறியதாவது:கடந்த தி.மு.க., ஆட்சி காலத்தில், தலைமையிடம் நெருக்கமாக இருந்து செயல்பட்டார் விஜய். ஆனால், சில விஷயங்களில் தி.மு.க., தரப்புடன் கருத்து வேறுபாடு ஏற்பட, விஜய்யின் தந்தை சந்திரசேகர், தி.மு.க., தரப்பு மீது கோபமானார்.இதனால், சந்தடியில்லாமல் இருந்த விஜய் ரசிகர் நற்பணி மன்றத்தை, அரசியல் இயக்கமாக மாற்ற முடிவெடுத்து, அதற்கான காரியங்களை மெல்ல மெல்ல செய்து கொண்டிருந்தார். வாய்ப்பு கிடைத்தால், தன் மகன் விஜய்யை தமிழகத்தின் முதல்வராக்கி விட வேண்டும் எனவும் முடிவெடுத்தார். இந்ந நேரத்தில், 2011ல் சட்டசபை தேர்தல் வந்தது. அ.தி.மு.க.,வுக்கு ஆதரவளித்து, விஜய் நற்பணி மன்றத்தினருக்கு, 'சீட்' கேட்டனர். சீட் கொடுக்கவில்லை. இருந்தாலும், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு கொடுத்தனர். அ.தி.மு.க., வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வர் ஆனார்.ஆனால், அ.தி.மு.க.,வின் வெற்றி தங்களால் தான் ஏற்பட்டது என்கிற ரீதியில் விஜய்யின் அப்பா சந்திரசேகர் பேச ஆரம்பித்தார். இந்த விவரம் அ.தி.மு.க., தலைமைக்கு செல்ல, ஜெயலலிதா, விஜய் தரப்பு மீது கோபமடைந்தார்.

இந்நிலையில், தன்னுடைய பிறந்த நாள் விழாவை சென்னை, தாம்பரம் ஜெயின் கல்லூரியில் வைத்து கொண்டாட ஏற்பாடு செய்தார் விஜய். அந்த விழாவுக்கு, கடைசி நேரத்தில் அனுமதி மறுத்தது போலீஸ். இதனால், அ.தி.மு.க., தலைமை மீது விஜய் தரப்பினர் அதிருப்தி அடைந்தனர். தொடர்ச்சியாக, விஜய் படம் துப்பாக்கிக்கு, அரசு தரப்பில் இருந்து குடைச்சல்கள் ஆரம்பமாகின. இதனால், அறிவிக்கப்பட்ட தேதியில் படம் ரிலீஸ் ஆகவில்லை. நீண்ட இழுபறிக்குப் பின் படம் ரிலீசானதால், படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. இதனால், ரொம்பவும் அப்செட் ஆனது விஜய் தரப்பு. கொஞ்ச நாட்கள் சினிமா, அரசியல் என்று எந்த நடவடிக்கையும் இல்லாமல் அமைதியாக இருந்தனர்.இந்த நிலையில், 2014 லோக்சபா தேர்தல் வர, இந்தியா முழுவதிலும் பா.ஜ.,வுக்கு ஆதரவாக அலை அடிப்பதை உணர்ந்து, நரேந்திர மோடி பக்கம் தன் பார்வையைத் திருப்பினார் விஜய். பிரசாரத்துக்காக கோவைக்கு வந்த மோடியை நேரில் சந்தித்து, தன் ஆதரவை வழங்குவதாக அறிவித்தார்.எதிர்பார்த்தது போலவே, நரேந்திர மோடி ஆட்சி மத்தியில் அமைந்துவிட, மீண்டும் விஜய்க்கு அரசியல் ஆசை துளிர்விட ஆரம்பித்திருக்கிறது. தமிழகத்தின் பிரதான கட்சியான தி.மு.க., தோல்வி அடைந்ததோடு, ஓட்டு வங்கியில் சரிவும் ஏற்பட்டுவிட, அ.தி.மு.க.,வுக்கு எதிரான பிரதான கட்சி இல்லாத வெற்றிட சூழல் தமிழகத்தில் ஏற்பட்டிருப்பதாக விஜய் தரப்பு உணருகிறது.

சரியாக அரசியல் செய்தால், தி.மு.க., இடத்தை நிரப்புவதோடு, 2016ல் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியும் எனவும் நம்புகின்றனர். இதற்காக, ம.தி.மு.க., - தே.முதி.க., - பா.ம.க., - காங்கிரஸ், தி.மு.க., போன்ற கட்சிகளில் அதிருப்தியாக இருக்கும் பலரிடமும் பேசி வருகின்றனர். அவர்களையெல்லாம் ஒருங்கிணைத்து, 2016 தேர்தலுக்கு முன், அரசியல் இயக்கம் ஆரம்பிக்க வேண்டும் என்பது, விஜய் தரப்பின் எண்ணம். அதற்கு முன்னதாக, தன்னை தமிழக அரசியல் களத்தில் பிரதானப்படுத்தும் வேலையை செய்வது என முடிவெடுத்துள்ளனர்.

No comments:

Powered by Blogger.