Header Ads

ஹீரோக்களின் இரட்டைவேட மோகம் - ஸ்பெஷல் ஸ்டோரி!

தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் இரட்டைவேடம் போடுவது சினிமாவின் தொடக்க காலத்திலிருந்தே நடந்து வருகிறது. அபூர்வ சகோரர்கள், நாடோடி மன்னன், நீரும் நெருப்பும், உத்தம புத்திரன், உலகம் சுற்றும் வாலிபன் என காலத்தால் அழிக்க முடியாத இரட்டைவேட காவியங்கள் இருக்கிறது. இது எப்போதாவதுதான் நடக்கும். ஆனால் சமீபகாலமாக ஹீரோக்களின் இரட்டைவேட மோகம் அதிகரித்திருக்கிறது. தற்போது டாப் ஹீரோக்கள் நடித்து வரும் படங்கள் இரட்டைவேட படமாகத்தான் இருக்கிறது. அல்லது இரண்டு கெட்அப்பிலாவது வருகிற படங்களாத்தான் இருக்கிறது. அது பற்றிய ஒரு கண்ணோட்டம்.

ரஜினி

பில்லாவில் தொடங்கியது ரஜியின் இரட்டைவேட பயணம். அதன் பிறகு ஜானி, நெற்றிக்கண், வீரா என அவ்வப்போது இரட்டை வேடங்களில் நடித்தார். சமீபத்தில் எந்திரன் படத்தில் நடித்தார். தற்போது வெளிவர இருக்கும் கோச்சடையானிலும் ரஜினி இரட்டை வேடம்தான். கோச்சடையான் என்ற அப்பாவாகவும், ராணா என்ற மகனாகவும் நடிக்கிறார். அடுத்து நடித்துக் கொண்டிருக்கும் லிங்கா படத்தில் ஊருக்கு உழைக்கும் பெரிய மனுஷன், அடிதடியில் இறங்கும் தாதா என இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

கமல்

கமலுக்கு இரட்டை வேடம் ஒன்றும் புதிதில்லை. இன்னும் சொல்லப்போனால் அதிகமாக இரட்டை வேடங்களில் நடித்தவர் கமல்தான். கல்யாணராமன், குரு, கடல் மீன்கள, தூங்காதே தம்பி தூங்காதே, எனக்குள் ஒருவன், ஒரு கைதியின் டயரி, புன்னகை மன்னன், அபூர்வ சகோதரர்கள், இந்தியன் இப்படி நிறைய படங்கள் அவர் கேரியரில் உண்டு. சமீபகாலமாக இரட்டை வேடத்தில் நடித்திராத கமல் தற்போது நடித்து வரும் உத்தம வில்லன் படத்தில் இரண்டு வேடத்தில் நடிக்கிறார். ஒருவர் 19ம் நூற்றாண்டில் வரும் தெருக்கூத்து கலைஞர். இன்னொருவர் நிகழ்கால சினிமா நடிகர்.

அஜீத்

வாலி, சிட்டிசன், வில்லன், அட்டகாசம், பில்லா-2, அசல் படங்களில் அஜீத் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். தற்போது அவர் கவுதம் மேனன் இயக்கும் படத்திலும் இரட்டை வேடம் என்கிறார்கள். ஆனால் அதனை முறைப்படி அறிவிக்கவில்லை. ரகசியமாக வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

விஜய்

விஜய் தன் கேரியரில் இரட்டை வேடங்களில் அதிகம் நடித்ததில்லை. அழகிய தமிழ் மகன் படத்தில் நடித்திருந்தார். சில படங்களில் இரண்டு கெட்அப்களில் நடித்திருக்கிறார். தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் கத்தி படத்தில் இரட்டை வேடம். செய்யாத குற்றத்திற்காக சிறையில் இருக்கும் அண்ணனாகவும், அவரைக் காப்பாற்றும் தம்பியாகவும் நடித்து வருகிறார்.

சூர்யா

சூர்யாவுக்கும் இரட்டை வேடம் புதிதல்ல. பேரழகன், வேல், வாரணம் ஆயிரம், 7ம் அறிவு, மாற்றான் படங்களில் இரட்டை வேடத்தில் நடித்தார். அதிலும் குறிப்பாக மாற்றான் படத்தில் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாகவே நடித்தார். தற்போது லிங்குசாமி இயக்கத்தில் நடித்து வரும் அஞ்சான் படத்தில் சாப்ட்வேர் என்ஜினீயர், அண்டர்கிரவுண்ட் தாதா என்ற இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார்.

சரத்குமார்

கமலுக்கு அடுத்தபடியாக அதிக இரட்டை வேடங்களில் நடித்திருப்பவர் சரத்குமார் நாட்டாமை, நம்ம அண்ணாச்சி, அய்யா, சூரிய வம்சம், அரசு, வைத்தீஸ்வரன், 1977 உள்பட பல படங்களில் நடித்திருக்கிறார். அவர் நடித்து பாதியில் நிற்கும் விடியல் படத்திலும் இரட்டை வேடம்தான். இப்போது ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் நடிக்க இருக்கும் சண்டமாருதம் படத்திலும் வில்லன், ஹீரோ என் இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.

வடிவேலு

வடிவேலு ஹீரோவாக அறிமுகமான இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்திலேயே இரட்டை வேடத்தில் நடித்தார். அதன் பிறகு வெளிவந்த இந்திரலோகத்தில் நான் அழகப்படன் படத்திலும், சமீபத்தில் வெளிவந்த தெனாலிராமன் படத்திலும் இரட்டை வேடத்தில் நடித்தார். அடுத்தும் அவர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் நடிக்க இருக்கும் படத்திலும் இரட்டை வேடம்தான். 18ம் நூற்றாண்டு மனிதனாகவும், இன்றையகால மனிதனாகவும் நடிக்கிறார்.

இதுபோல இன்னும் பலரும் இரட்டை வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லாகட்டத்திலும் ஹீரோக்கள் இரட்டை வேடத்தில் நடித்திருந்தாலும் ஒரே நேரத்தில் எல்லா ஹீரோக்களும் இரட்டை வேடத்தில் நடிப்பது இதுதான் முதல் முறை.

No comments:

Powered by Blogger.