Header Ads

பவன்கல்யாணுக்கு மத்திய மந்திரி பதவி: சந்திரபாபு நாயுடு சிபாரிசு..

ஆந்திராவில் நடிகர் சிரஞ்சீவி காங்கிரசில் இணைந்து மத்திய மந்திரி ஆனார். தெலுங்கானா பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்த அவர் மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

பாராளுமன்ற தேர்தலின் போது நடிகர் சிரஞ்சீவியின் தம்பியும் நடிகருமான பவன் கல்யாண் அரசியலில் குதித்தார். ‘‘ஜன சேனா’’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கினார். அவர் நரேந்திரமோடியை சந்தித்து பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்தார்.

ஆந்திராவில் பா.ஜனதா, தெலுங்குதேசம் இடையே கூட்டணி உருவானது. நடிகர் பவன் கல்யாண் இந்த கூட்டணியை ஆதரித்து மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்தார். அங்கு தேர்தல் வெற்றிக்கு பவன் கல்யாண் பிரசாரமும் ஒரு காரணம்.

இதையடுத்து கூட்டணி வெற்றிக்கு உழைத்த நடிகர் பவன் கல்யாணுக்கு உரிய அந்தஸ்து வழங்க நரேந்திரமோடியும், சந்திரபாபு நாயுடுவும் முடிவு செய்துள்ளனர். பவன் கல்யாணுக்கு மத்திய மந்திரி பதவி வழங்கப்படுகிறது.

பவன் கல்யாண் தேர்தலில் போட்டியிடவில்லை. அவரது கட்சியும் தேர்தலில் நிற்கவில்லை. இதனால் அவரை மேல் – சபை எம்.பியாக தேர்ந்து எடுத்து மத்திய மந்திரியாக நியமிக்குமாறு சந்திரபாபு நாயுடு சிபாரிசு செய்துள்ளார்.

அடுத்த மாதம் கர்நாடக மாநிலத்தில் இருந்து டெல்லி மேல் – சபைக்கு 4 எம்.பிக்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறுகிறது. எனவே பவன் கல்யாண் கர்நாடகத்தில் இருந்து டெல்லி மேல் – சபைக்கு தேர்வு செய்யப்படுவார் என்றும் இதற்கு மோடி சம்மதித்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் பவன்கல்யாண் கப்பு இனத்தைச் சேர்ந்தவர். இந்த பிரிவினரின் வாக்கு ஆந்திராவில் 18 சதவீதம் உள்ளது. பவன் கல்யாண் பிரசாரம் அவர்களது வாக்குகளை பா.ஜனதா கூட்டணிக்கு பெற்றுக் கொடுத்துள்ளது.

பவன் கல்யாண் பிரசாரம் பா.ஜனதா கூட்டணிக்கு வெற்றி தேடித்தந்ததுடன் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் முதல் – மந்திரி கனவை தகர்த்து விட்டது.

No comments:

Powered by Blogger.