Header Ads

ராஜபக் ஷேவுக்கு எதிர்ப்பு: மோடியின் ராஜதந்திரம் புரியாமல் நடக்கும் கூத்து

இந்தியாவின் புதிய பிரதமராக, நரேந்திர மோடி பதவியேற்றுக் கொள்ளும் விழாவுக்கு, இலங்கை அதிபர் ராஜபக் ஷேவை அழைத்திருப்பது, ஏதோ செய்யக் கூடாத காரியத்தை, மோடி தரப்பினர் செய்துவிட்டது போல், தமிழர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூச்சலிடுகின்றனர். அதுமுழுக்க முழுக்க தவறான விஷயம் என்பதை தெரிந்திருந்தும், அவர்கள் ஏன் அப்படி கூக்குரலிடுகின்றனர் என்பது புரியவில்லை.

சற்றும் பொருந்தாத விஷயம்


அதுவும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்று, மோடி ஆதரவு அலை, பா.ஜ.,வுக்கான ஓட்டு களையெல்லாம் பெற்றிருக்கும் ம.தி.மு.க.,வின் வைகோ, இந்த விஷயத்தில் மிகத் தீவிரமாக இருப்பது, சற்றும் பொருந்தாத விஷயமாகத்தான் பார்க்கப்படுகிறது.நரேந்திர மோடி என்பவர், சாதாரண மனிதர் அல்ல. இந்தியா என்னும் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டிருப்பவர். கிட்டதட்ட, 14 ஆண்டுகள், குஜராத்தின் முதல்வராகவும் இருந்தவர். அவர், எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என, சொல்கிறவர், செய்கிறவர் அல்ல.அவர் எதற்காக இதை செய்தார் என்கிற நிஜமான விவரங்களை, தமிழக பா.ஜ., உட்பட அகில இந்திய பா.ஜ.,வும் சரியாக சொல்லத் தவறியதால் தான், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில், தமிழ் அமைப்புகளின் பெயர்களில், ஆங்காங்கே சின்ன சின்ன சலசலப்புகள் ஏற்பட்டன.நரேந்திர மோடி மிகப் பெரிய சாணக்கியத்தனத்தோடு தான், தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பில் இருக்கும் நாடுகளின் அதிபர்களுக்கு, தன்னுடைய பதவியேற்பு விழாவுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்திருக்கிறார். இந்தியாவை சுற்றிலும் இருக்கும் எல்லா நாடுகளுமே, இந்தியாவோடு நட்புறவோடு தான் இருக்கின்றன என்று எடுத்துக் கொள்ள முடியாது.

தொலைநோக்கு பார்வை


நட்புறவோடு இல்லாத நிலைமையே தொடர்ந்தால், இந்தியாவில் நாமெல்லாம் நிம்மதியாக இருக்க முடியாது. ஆக, அப்படியொரு சூழ்நிலையை மாற்ற வேண்டும் என்கிற தொலைநோக்கு பார்வையோடு தான், நரேந்திர மோடி, தன் பதவியேற்பு விழாவுக்கு, பாகிஸ்தானின் நவாஸ் செரீப், இலங்கையின் ராஜபக் ஷே, ஆப்கானிஸ்தானின் கர்சாய் போன்றவர்களை அழைத்திருக்கிறார்.இப்படியொரு அழைப்பை நரேந்திர மோடி விடுத்ததும், முதலில் அவர்கள் என்ன மாதிரி ரியாக்ட் செய்கிறார்கள் என்பதை கவனிக்கும் நோக்கம் தவிர, இப்படியொரு அழைப்பை விடுத்ததும், அந்தந்த நாடுகளில் இருக்கும் மக்கள் என்ன மாதிரி ரியாக்ட் செய்கின்றனர் என்பதையும் பார்க்க மோடி விரும்பினார்.

ராஜ தந்திரமான செயல்


அதேபோல, அங்கிருக்கும் தீவிரவாத குழுக்களும், அரசாங்க எதிர்ப்பு குழுக்களும் எப்படி, இந்த அழைப்பை எதிர் கொள்கின்றன என்பதையெல்லாம் தெரிந்து கொள்ள விரும்பினார் மோடி. அதோடு, இந்தியாவின் நட்பு எல்லைக்குள் இல்லாத சீனாவுக்கு அழைப்பு விடுக்க விரும்பாத மோடி, இவர்களுக்கெல்லாம் அழைப்பு விடுத்திருப்பது, ராஜ தந்திரமான செயல். அழைப்பு விடுக்கப்பட்ட நாடுகளின் அதிபர்கள், இந்தியாவின் அழைப்பை ஏற்கவில்லை என்றால், அவர்கள் சீனாவின் கைப்பாவையாக செயல்படுவதும், அல்லது சீனாவின் கண் அசைவில் செயல்படுவதும், கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக எடுத்துக் கொள்ளலாம். தான் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும், இந்த மாதிரி விஷயங்களில் தீவிர கவனம் செலுத்தி, அதை உடைக்க வேண்டும் எனவும் விரும்பினார். அப்படியெல்லாம் நாட்டின் எதிர்கால நலனுக்காக திட்டமிட்டு, காரியமாற்ற ஆரம்பித்திருக்கும் மோடியின் நேர்மையான, ராஜ தந்திரமான, கூர்மையான செயல்பாடுகள் புரியாமல், குறுகிய எண்ணங்களோடு இங்கிருப்பவர்கள் குரலெழுப்பினால், அதை யாரும் பொருட்படுத்த வேண்டியதில்லை.இப்படித் தான் இலங்கை, சீனாவின் கரங்களுக்குள் சென்று கொண்டிருக்கிறது என்றதும், ஒரு காலத்தில் சர்வ பலத்துடன் இந்தியாவை ஆண்டு கொண்டிருந்ததோடு, அண்டை நாடுகள் மிரளும் வகையில், ஆட்சியில் இருந்த பிரதமர் இந்திரா, இலங்கையில் அரசுக்கு எதிராக தீவிரவாத குழுக்களை உருவாக்கினார். அந்த குழுக்களுக்கு, இந்தியாவில் வைத்து பயிற்சியும் கொடுக்கச் செய்தார்.அந்த பிரச்னை தான், பெரிய அளவில் வளர்ந்து பல ஆண்டுகளுக்கு, இலங்கையின் நிம்மதியை மட்டுமல்ல, பொருளாதார வளர்ச்சியையும்குலைத்துப் போட்டது. அதெல்லாம், இன்றைய இலங்கை அதிபர் ராஜபக் ஷேக்கு மிக நன்றாக தெரியும்.

பயந்தார்...


நரேந்திர மோடி, இந்திராவை விட இரும்பு மனிதராக இருந்து செயல்படக் கூடியவர் என்பது, ராஜபக் ஷேவுக்கு நன்கு தெரியும். இதெல்லாம் தெரிந்து தான், பதவியேற்பு விழாவை புறக்கணித்து, ஆரம்பத்திலேயே இந்தி யாவில் ஏற்பட்டிருக்கும் புதிய அரசோடு நெருடலை ஏற்படுத்திக் கொண்டால், அது பழைய படியே பிரச்னையை ஏற்படுத்தி விடும் என பயந்தார் ராஜபக் ஷே.அதனால் தான், அவர் நரேந்திர மோடியிடம் இருந்து அழைப்பு என்றதும், வருகை தர உடனே ஒப்புக் கொண்டு விட்டார். அதேபோல், இலங்கையில் யார் அதிபராக இருந்தாலும், பின்னணியில் இருந்து ஆட்சி பரிபாலனத்தை நடத்திக் கொண்டிருக்கும் புத்த பிட்சுக்களும், இந்த ஆபத்தை உணர்ந்தே இருக்கின்றனர். அதனால், அவர்களும், ராஜபக் ஷேவின் இந்திய பயணத்துக்கு 
பச்சைக்கொடி காட்டி விட்டனர்.

புரியாமல் போனது எப்படி?


இதேபோலத் தான், நவாஸ் செரீப் விஷயத்திலும் நடக்கிறது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் முதல்வராக இருக்கும், தேசிய மாநாட்டு கட்சியின் உமர் அப்துல்லா, நரேந்திர மோடியின் பதவியேற்பு அணுகுமுறையை வரவேற்றிருக்கிறார். அதேபோல், அந்த மாநிலத்தின் பிரதான இயக்கமான ஜம்மு - காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் மெகபூபாவும் வரவேற்றிருக்கிறார். ஆக, அவர்கள் எல்லாம் புரிந்து கொண்ட, ஒரு ராஜதந்திரமான நடவடிக்கை, ம.தி.மு.க.,வின் வைகோவுக்கும், இங்கிருக்கும் தமிழ் அமைப்புகளுக்கும் புரியாமல் போனது எப்படி என்றுதான் தெரியவில்லை.வைகோவை பொறுத்த வரையில்,அவர் உணர்ச்சிவசப்பட்டு அரசியல் செய்கிறாரே தவிர, நீண்ட கால பார்வையோடு அரசியல் செய்யவில்லை. தமிழ் அமைப்புகள், ராஜபக் ஷே வருகையை காரணம் காட்டி மோடியை எதிர்ப்பதால், அவர்கள் இழக்கப் போவது எதுவுமில்லை.

அரசியல் வாழ்க்கைக்கு சூன்யம்


ஆனால், அரசியலில் தனித்து விடப்பட்டு தொடர் தோல்வியில் இருக்கும் வைகோ, ராஜபக் ஷே வருகைக்கு எதிராக போராட்ட அரசியல் நடத்துவது, அவருடைய அரசியல் வாழ்க்கைக்கு அவரே வைத்து கொள்ளும் சூன்யம்.அது மட்டுமல்ல, இலங்கை தமிழர் பிரச்னையில், ரோட்டில் நின்று கூச்சலிடும் வெற்று கூட்டத்தால், எத்தனை காலமானாலும் தீர்வையோ, நல்லதையோ செய்ய முடியாது. அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் நரேந்திர மோடி, ராஜபக் ஷே போன்றவர்களால் தான்தீர்வை செய்ய முடியும் என்பதைதெள்ளத் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். அதுதான், தமிழர்களுக்கு அவர்கள் செய்யும் நல்ல காரியமாக இருக்கும்.காஷ்மீர் அரசியல்வாதிகள் ஒன்றும் தெரியாத முட்டாள்கள் அல்ல. அதனால் தான், நவாஸ் செரீப்பின் இந்திய வருகையை வரவேற்று விட்டனர். அவர்களுக்கு தெரிந்த அரசியலை, நம் தமிழினத் தலைவர்களுக்கு யார் சொல்லிக் கொடுப்பது?

No comments:

Powered by Blogger.