Header Ads

நரேந்திரமோடியின் 10 கட்டளைகள்:நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம்

புதுடில்லி: நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் வகையில், முக்கியமான 10 திட்டங்கள் குறித்து பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார். இன்றைய அமைச்சரவை கூட்டத்திற்கு பின், இது குறித்து அவர் நாட்டு மக்களிடையே உரையாற்றுவார் என டில்லி தகவல்கள் கூறுகின்றன. பிரதமராக பதவி ஏற்ற முதல் நாளில் இருந்தே நரேந்திரமோடி பரபரப்பாக செயலாற்ற துவங்கிவிட்டார். தனது தேர்தல் பிரசாரத்தின் போது, நாட்டு மக்களுக்கு என்னென்ன வாக்குறுதிகள் கொடுத்தாரோ, அதை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர் கவனம் செலுத்தி வருகிறார். முதற்கட்டமாக, தனது செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருக்கும் வகையில் அமைச்சரவையை அமைத்துள்ளார். அடுத்ததாக, தற்போதுள்ள சூழ்நிலையில் நாட்டிற்கு மிக முக்கிய தேவையான திட்டங்களை தயாரிக்கும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார்.
10 முக்கிய திட்டங்கள்:

இந்த வகையில் 10 முக்கிய திட்டங்களை அவர் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் வெளியிட்டார். அவை: 01. அதிகாரத்துவத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துதல் 02. புதுமையான யோசனைகளை வரவேற்பதுடன், அதிகாரிகள் சுதந்திரமாக பணியாற்ற அதிகாரம் அளித்தல். 03. கல்வி, சுகாதாரம், குடிநீர், மின்சாரம் மற்றும் சாலைகள் தொடர்பான பிரச்னைகளுக்கு முன்னுரிமை. 04. அரசின் இணைய ஏலத்தில் வெளிப்படை தன்மையை ஊக்குவித்தல். 05. அமைச்சகங்களுக்கிடையே ஏற்படும் பிரச்னைகளை களைய புதிய அமைப்பு. 06. அரசு நிர்வாகத்தில், மக்கள் தொடர்பான விஷயங்களுக்கு தனி அமைப்பு. 07. பொருளாதாரம் தொடர்பான பிரச்னைகளுக்கு முன்னுரிமை. 08. உள்கட்டமைப்பு மற்றும் முதலீடுகள் சீரமைக்க நடவடிக்கை. 09. சரியான கால இடைவெளியில் கொள்கைகளை அமல்படுத்த நடவடிக்கை. 10. அரசு கொள்கைகள், நிலைத்தன்மை மற்றும் நிலைநிறுத்தும் திறன் கொண்டதாக இருக்க ஏற்பாடு.
இந்த 10 கொள்கைகளின் அடிப்படையில் செயல்பட வேண்டும் என, தனது அமைச்சரவை சகாக்களை மோடி கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக, பிரதமரின் முதன்மை செயலாளர் நிரிபேந்திர மிஸ்ரா தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், 'புதிய பிரதமரின் தலைமையில், நாடு வளர்ச்சிப் பாதையில் செல்லும் பொருட்டு. புதிய பொருளாதார கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன,' என்றார். 
அமைச்சர்களுக்கு 'டிப்ஸ்':

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் சில அமைச்சர்களின் பேச்சு, கட்சிக்கும் ஆட்சிக்கும் ஊறு விளைவிப்பதாக இருந்தது. இந்நிலையில், தனது அமைச்சர்கள் எப்படி செயலாற்ற வேண்டும் என்பது குறித்து மோடி அறிவுரை கூறி உள்ளார். உறவினர்களை அமைச்சர்கள் தங்கள் அலுவலகங்களில் பணியமர்த்தக் கூடாது; அப்பாயின்ட்மென்ட் கொடுப்பதில் கவனம் வேண்டும்; சர்வாதிகார மனப்பான்மையுடன் செயல்பட கூடாது; மீடியாக்களிடம் பேசும்போது மிக கவனமாக பேச வேண்டும்; எந்த விஷயம் குறித்து பேசினாலும், மிக கவனமாக பேச வேண்டும் என்பது உள்ளிட்ட பல 'டிப்ஸ்'களை மோடி அமைச்சர்களுக்கு வழங்கி உள்ளார்.
அதிகாரிகளுக்கு அறிவுரை:

தனது அலுவலக அதிகாரிகளுக்கும் மோடி சில அறிவுரைகளை கூறி உள்ளார். பிரதமர் அலுவலக அதிகாரிகளை, கடந்த புதன்கிழமை சந்தித்த அவர், 'மாநிலங்கள் வளர்ச்சி பெற்றால் தான் இந்தியா வளர்ச்சி பெறும். எனவே, மாநிலங்கள் வளர்ச்சி குறித்த திட்டங்களில் உடனடியாக கவனம் செலுத்துங்கள்; எந்த பிரச்னையானாலும் என் கவனத்திற்கு கொண்டு வாருங்கள். என்னை நேரில் சந்தித்து பேசுங்கள்,' என்று கூறி உள்ளார். இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்ல வேண்டும் என்ற தனது நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக அமைச்சர்களையும், அதிகாரிகளையும் பிரதமர் மோடி தயார் செய்து வருகிறார்.. 
100 நாள் அறிக்கை:

மத்திய அமைச்சர்கள் சிறப்பாக செயல்படவும், புகார்களில் சிக்கிக் கொள்ளாமல் இருக்கவும் மோடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இதன்படி, மத்திய அமைச்சர்கள் தங்களது இணையமைச்சர்களாக உள்ளி்ட்டவர்கள், சரியாகவும் மற்றும் நேர்மையாகவும் பணியாற்றுகின்றனரா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மாநிலங்களின் வளர்ச்சியே, ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சி என்பதை கருத்தில் கொண்டு அனைத்து அமைச்சர்களும் பணியாற்ற வேண்டும், அமைச்சர்கள், தாங்கள் முதல் 100 நாட்களில் மேற்கொண்ட பணிகள் குறித்த அறிக்கையை தயாரிக்க வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகளை, அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி பிறப்பித்துள்ளார். 
கூடுதல் அமைச்சர்கள்:

தற்போது, பாதுகாப்பு துறை உள்ளிட்ட சில முக்கிய துறைகளுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில், மோடி அமைச்சரவை விரிவாக்கப்படும் என உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில், 20 முதல் 30 அமைச்சர்கள் சேர்க்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

No comments:

Powered by Blogger.