Header Ads

கன்னியாகுமரி அருகே மாதா சொரூபத்தில் கண்ணீர் வடிந்ததாக பரபரப்பு



கன்னியாகுமரியை அடுத்த கீழமணக்குடியில் புனித திருச்சிலுவை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் எதிரே மாதா கெபி உள்ளது. இங்கு கண்ணாடி கூண்டுக்குள் மாதா சொரூபம் அமைக்கப்பட்டு இருந்தது.

ஆலயத்துக்கு காலை, மாலை நேரங்களில் பிரார்த்தனைக்கு வரும் பக்தர்கள் கெபி முன் நின்று வழிபடுவதை வழக்கமாக கொண்டு இருந்தனர்.

நேற்று மாலை ஆலயத்தில் பிரார்த்தனைக்காக பெண்கள் வந்தனர். மாதா கெபி முன்பு நின்று அவர்கள் வழிபட்டனர். அப்போது மாதா சொரூபத்தின் இடது கண்ணில் இருந்து கண்ணீர் வடிந்ததற்கான தடயங்கள் தென்பட்டன. இதை பார்த்த பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்கள் மாதா சொரூபம் கண்ணீர் வடிப்பதாக ஆலய நிர்வாகிகளிடம் தெரிவித்தனர். இந்த தகவல் ஊர் முழுக்க பரவி அங்கு பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் மாதா கெபி முன்பு கூடி வழிபட்டனர்.

ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போவதை உணர்த்தவே இவ்வாறு மாதா கண்ணீர் வடிப்பதாகவும், அந்த ஆபத்தில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று கோரி அவர்கள் மாதாவை வேண்டி வழிபட்டனர்.

நள்ளிரவு 12 மணி வரை அங்கு பிரார்த்தனை நீடித்தது. பின்னர் பெண்கள் தங்கள் வீடுகளுக்கு சென்றனர். ஆனால் ஏராளமான ஆண்கள் ஆலயத்திலேயே விடிய, விடிய தங்கினர்.

இன்று காலை பக்கத்து கிராம மக்களும் கீழமணக்குடிக்கு படையெடுத்து வந்தனர். கண்ணீர் வடிந்ததாக கூறப்பட்ட மாதா சொரூபத்தை பார்த்தது மட்டுமல்லாமல் மனமுருகி வழிபட்டனர். பலர் செல்போனில் புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு நீடித்து வருகிறது.

No comments:

Powered by Blogger.