Header Ads

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு அதிர்ச்சி அளிக்கிறது: அற்புதம்மாள் பேட்டி

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ‘‘பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து சுப்ரீம் கோர்ட்டு இன்று பரபரப்பான தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக இந்த வழக்கில் இன்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சதாசிவம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். ராஜீவ் கொலையாளிகள் 7 பேரின் விடுதலை தொடர்பாக 7 விதமாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளதால், இந்த வழக்கை அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றுவதாக அவர் தனது உத்தரவில் குறிப்பிட்டார். இதனால் 7 பேரின் விடுதலையும் தாமதமாகியுள்ளது.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேருக்கும் சுப்ரீம் கோர்ட்டில் இன்று எப்படியும் சாதகமாகத்தான் தீர்ப்பு வரும் என்கிற எதிர்பார்ப்பில், அவரது தாய் அற்புதம்மாள் கோயம்பேடு பஸ் நிலையம் அருகில் உள்ள செங்கொடி அரங்குக்கு (பல்வேறு ஈழ ஆதரவு போராட்டங்கள் நடைபெற்ற இடம்) வந்திருந்தார்.

சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை கேட்டதும் அவர் கடும் அதிர்ச்சியடைந்தார். பின்னர் கண்ணீர் மல்க அற்புதம்மாள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

எனது மகன் பேரறிவாளன் நிரபராதி என்று முடிவான பின்னரும் அவனது விடுதலையில் தொடர்ந்து தாமதம் ஏற்படுவது மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

பேரறிவாளனின் விடுதலைக்காக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்துள்ளேன். கடந்த பிப்ரவரி மாதம் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சதாசிவம் பிறப்பித்த உத்தரவுக்கு பின்னர் தமிழக முதல்–அமைச்சர் 7 பேரையும் விடுவிப்பதாக அறிவித்தார்.

இதன் பின்னர் முதல்–அமைச்சரை நான் சந்தித்த போது, அவர் கூறிய வார்த்தைகள் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. ‘‘உங்கள் மகன் வந்து விடுவான். இனி... உங்களுக்கு துன்பம் இல்லை. மகிழ்ச்சியுடன் இருங்கள்’’ என்று அவர் கூறினார். இதனால் எனது மகன் எப்படியும் விடுதலையாகி விடுவான் என்கிற சந்தோஷத்திலேயே இருந்தேன்.

சுப்ரீம் கோர்ட்டில் இன்றைய தீர்ப்பின் போது அறிவு (பேரறிவாளன்) நிச்சயம் விடுதலையாவான் என்று எதிர்பார்த்தே கோயம்பேடு செங்கொடி அரங்கத்துக்கு வந்தேன். ஆனால் இப்படி ஒரு தீர்ப்பு வரும் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை. அரசியல் சாசன அமர்வுக்கு விடுதலை வழக்கு மாற்றப்பட்டிருப்பதன் மூலம் எனது நிம்மதி பறிபோயுள்ளது.

விடுதலை வழக்கில் தடையை ஏற்படுத்துவது போல, எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் எதிர்பாராத திருப்பமாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. எனது மகன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை வழக்கு முடிவுக்கு வந்து விடக்கூடாது என்கிற நோக்கத்தில் யாரும் சூழ்ச்சி செய்கிறார்களா? என்பதை என்னால் உறுதியாக கூற முடியவில்லை.

எனது மகன் நல்லவன். 23 ஆண்டாக அவனுக்காக போராடி வரும் நான், மீண்டும் முழு பலத்துடன் போராட உள்ளேன். சட்டம் எல்லோருக்கும் சமம். ஆனால் நிரபராதியான எனது மகன் இத்தனை ஆண்டுகளாக தனிமை சிறையில் வாடி வருகிறான். அவனை காப்பாற்றுவதற்கு அனைவரும் முன் வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Powered by Blogger.