Header Ads

வாயை மூடி பேசவும்.. சினிமா >> விமர்சனம்

நடிகர் : துல்கர் சல்மான்நடிகை : நஸ்ரியா நசிம்இயக்குனர் : பாலாஜி மோகன்இசை : சியன் ரால்டன்ஓளிப்பதிவு : சௌந்தர் ராஜன்
மலைப்பிரதேசத்தில் வாழ்ந்து வருகிறார் நாயகன் துல்கர் சல்மான். இவர் வீடுவீடாக சென்று கம் விற்கும் தொழிலை செய்து வருகிறார். சிறந்த பேச்சு திறன் கொண்ட இவர் ரேடியோவில் தொகுப்பாளராக வேண்டும் என்பதே இவரின் இலட்சியம்.

இந்நிலையில் இந்த ஊரில் வித்தியாசமான நோய் ஒன்று பரவுகிறது. இந்நோய் பாதிக்கப்பட்டால் பேச்சு வராமல் போய்விடுகிறது. இதனை அறிந்து சுகாதாரத்துறை அமைச்சரான பாண்டியராஜன், அங்குள்ள பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியாக பதில் சொல்ல முடியாத இவர், தனக்கும் அந்த நோய் தாக்கப்பட்டதாக கூறி வாய்ப்பேச முடியாமல் நடிக்கிறார். 

அந்த ஊரில் உள்ள மருத்துவமனையில் பணிபுரியும் நாயகி நஸ்ரியாவிடம், தனக்கு அந்த நோயின் அறிகுறி இருப்பதாக கருதி சோதனை செய்ய சொல்கிறார் நாயகன் துல்கர் சல்மான். இதன் காரணமாக அடிக்கடி மருத்துவமனைக்கு வரும் துல்கர் சல்மானும், நஸ்ரியாவும் பழக்கம் ஏற்படுகிறது. 

நஸ்ரியாவிற்கு உறவினர் ஒருவரை திருமணம் செய்ய வீட்டில் உள்ளோர்கள் முடிவு செய்கிறார்கள். அந்த உறவினர் நஸ்ரியாவிற்கு நிறைய கட்டுப்பாடுகளை விதிக்கிறார். இதைப் பிடிக்காத நஸ்ரியா அவர் மீது ஈடுபாடு இல்லாமல் இருந்துவருகிறார். இதற்கிடையில் அந்த ஊரில் அதிகமாக எல்லோரும் பேசுவதால்தான் நோய் அதிகமாக பரவுவதாக அரசு முடிவு செய்கிறது. இதனால் ஊரில் யாரும் பேசக் கூடாது என்று அரசு உத்தரவு போடுகிறது. அப்படி பேசுபவர்கள் இறக்க நேரிடும் என்றும் கூறுகிறது. இதனால் அனைவரும் பேசுவதை தவிர்த்து செய்கையால் கருத்துக்களை பரிமாறிக்கொள்கிறார்கள்.

இந்நிலையில் நஸ்ரியாவிற்கு உறவினர் பிடிக்காமல் போக, துல்கர் சல்மான் மீது காதல் ஏற்படுகிறது. துல்கருக்கும் நஸ்ரியா மீது காதல் ஏற்படுகிறது. எல்லாவற்றையும் வெளிப்படையாக பேசும் துல்கர், நஸ்ரியாவின் மீது உள்ள காதலை சொல்லாமல் தயக்கம் காட்டி வருகிறார். நஸ்ரியாவும் துல்கர் மீது உள்ள காதலை வெளிகாட்ட முடியாமல் தயங்கி வருகிறார். இந்நிலையில் நோய்க்கு மருந்து கண்டுபிடித்து ஊரில் பேசக் கூடாது என்ற தடை உத்தரவு நீக்கப்படுகிறது.

தடை நீக்கப்பட்டப் பிறகு இருவரும் தன் மனதில் உள்ள காதலை பகிர்ந்துக் கொண்டார்களா? இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே மீதிக்கதை.

படத்தில் நாயகன் துல்கர் சல்மான், தனது முதல் தமிழ்ப்படத்தை சிறப்பாக செய்திருக்கிறார். சொந்தக்குரலில் தமிழில் பேசி நடித்திருப்பது மேலும் சிறப்பு. துறுதுறு இளைஞனாக படம் முழுக்க சிறப்பாக வலம் வருகிறார்.

மருத்துவராக வரும் நாயகி நஸ்ரியாவிற்கு படத்தில் நடிக்க வாய்ப்பு குறைவு. பெரும்பாலான காட்சிகளில் சோக முகத்துடனே வருகிறார். படத்தில் துறுதுறு நஸ்ரியாவை பார்க்க முடியாதது மிகுந்த ஏமாற்றம். பொருந்தாத கதாபாத்திரம் என்றே எண்ணத்தோன்றுகிறது. அமைச்சராக வரும் பாண்டியராஜன் நகைச்சுவையான நடிப்பில் ரசிகர்களை கவர்கிறார். நீண்ட நாட்களுக்குப்பிறகு திரையில் வந்திருக்கும் மதுபாலா, கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். 

சியன் ரால்டனின் இசை படத்திற்கு கூடுதல் பலம். பிற்பாதியில் வசனங்களே இல்லை என்பதை மறக்க வைத்து இவருடைய இசையாலயே படத்தை நகர்த்தி செல்கிறார். காட்சிகளுக்கு ஏற்றார் போல் இசையமைத்து ரசிகர்களின் பாராட்டை பெறுகிறார். சௌந்தர் ராஜன் ஒளிப்பதிவில் காட்சிகள் ஒவ்வொன்றும் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.

வித்தியாசமான கதைக்கருவைக் கொண்டு களம் இறங்கியுள்ள இயக்குனர் பாலாஜி மோகன், எந்த பிரச்சனைகளையும் பேசி முடித்துவிடலாம் என்ற நாயகன், எதையுமே வெளிப்படையாக பேசமுடியாத நாயகி, பேசவே தெரியாத அமைச்சர், சினிமா நடிகரை எதிர்த்துப் போராடும் குடிகாரர்கள் சங்கம், நடிகருக்கு ஆதவாக ரசிகர்கள், தன் கணவரிடமே கருத்தை பகிர்ந்துக் கொள்ளாத மனைவி மதுபாலா, என அனைவரிடமும் கதையை பிரித்துக் கொடுத்து அதை அழகான திரைக்கதையை அமைத்திருக்கிறார். குறிப்பாக குடிகாரர்கள் சங்கம் அடிக்கும் லூட்டிகள் ரசிக்கும் படியாக இருக்கிறது. 

மொத்தத்தில் ‘வாயை மூடி பேசவும்’ மௌனமான வெற்றி.

No comments:

Powered by Blogger.