Header Ads

காஷ்மீர் தீவிரவாதிகளுடன் மோதல் வீரமரணம் அடைந்த மேஜர் உடல் சென்னை கொண்டு வரப்படுகிறது

சென்னை: காஷ்மீர் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் வீரமரணம்  அடைந்த ராணுவ மேஜர் சென்னையைச் சேர்ந்தவர் என்று  தகவல்  வெளியாகி உள்ளது. சென்னை கிழக்கு தாம்பரம் புரபஸர் காலனி பார்க் வியு  அபார்ட்மென்டில் வசிப்பவர் ஓய்வுபெற்ற வங்கி மேலாளர் வரதராஜன்.  இவருடைய மகன் முகுந்த் வரதராஜன் (32). இவரது மனைவி இந்து.  இவர்களின் மூன்று வயது மகள் அஷ்யா. முகுந்த் ராணுவத்தில்  மேஜராக பணியாற்றினார். பெங்களூரில் உள்ள ராணுவ குடியிருப்பில்  குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த 2012ம் ஆண்டு முதல்  காஷ்மீரில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த 25ம் தேதி  மாலை காஷ்மீரில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுடன் ராணுவத்தினர்  கடுமையாக சண்டையிட்டனர். 

நீண்டநேரம் நடந்த துப்பாக்கி சண்டையில், மேஜர் முகுந்த் வரதராஜன்  (32) மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது. அதில் அவர் வீரமரணம்  அடைந்தார். அந்த தாக்குதலில் தீவிரவாதிகளும்  சுட்டுகொல்லப்பட்டனர். இது குறித்து, அவரது மனைவி இந்துவுக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது. அதை கேட்டதும், அவர் மனநிலை  பாதிக்கப்பட்டார். 
இதற்கிடையில், இந்துவின் தந்தை வர்கீஸ், பேஸ்புக்கில் ராணுவ  மேஜர் இறந்ததை பார்த்துள்ளார். உடனே முகுந்த் தந்தை  வரதராஜனுக்கு போன் செய்து, விஷயத்தை கேட்டார். அதற்கு  எங்களுக்கு எதுவும் தெரியவில்லை. இந்துவிடம் கேட்டால், தெரியும்  என கூறினர்.

உடனே இந்துவுக்கு போன் செய்தனர். ஆனால், அவர் போனை  எடுக்கவில்லை. இதை தொடர்ந்து, டெல்லியில் உள்ள ராணுவ  தலைமை அலுவலகத்துக்கு போன் செய்து, சம்பவம் குறித்து  கேட்டனர். அதில் மேஜர் முகுந்த் வரதராஜன் வீரமரணம் அடைந்தது  உறுதியானது. அவரது உடல், நாளை சென்னை வருகிறது.  இந்நிலையில், சடலம் அவரது வீட்டில் உறவினர்கள் மற்றும்  பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். பின்னர், ராணுவ  மரியாதையுடன், குரோம்பேட்டையில் உள்ள எரிவாயு தகனமேடையில்  இறுதி சடங்கு நடைபெறும்.

No comments:

Powered by Blogger.