Header Ads

ஓசூர் அருகே கார்கள் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி

வேலூர் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் (50). காட்பாடி காவல் நிலையத்தில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். பெங்களூரில் ஒரு விசேஷ நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஆனந்தன் குடும்பத்தினருடன் 2 கார்களில் நேற்று இரவு பெங்களூர் புறப்பட்டார்.

ஓசூர்–சூளகிரி அருகே கோபசந்திரம் என்ற இடத்தில் சென்றபோது, அங்கு பழுதாகி நின்றிருந்த ஒரு லாரி மீது 2 கார்களும் ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்து மோதி அப்பளம் போல் நொறுங்கின.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்தவர்கள் இடிபாடுகளுக்கிடையில் சிக்கி அலறினார்கள். இதைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

விபத்தில் சொகுசுக்காரில் இருந்த ஆனந்தன், அவரது மனைவி உமா, மகள் சந்தியா (13), ஆனந்தனின் உறவினர் பாபு (40), அவரது மனைவி ரமணி, மகன் அருண் (13), டிரைவர் வில்லு என்ற வில்வநாதன் ஆகிய 7 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர்.

அடுத்த காரில் வந்த முருகன், ஆனந்தனின் மகள் ஐஸ்வர்யா (15), பாபுவின் மகள்கள் ஷாலினி (20), ப்ரீத்தி (7), முருகனின் மகன் திவாகர்(4) ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். முதலுதவி சிகிச்சைக்கு பின்னர், 5 பேரும் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

நொறுங்கிக் கிடந்த கார்கள், கிரேன் மூலம் அப்புறப்படுத்தப்பட்டன. விபத்திற்குள்ளான இரண்டு கார்களின் பின்புறம் அந்த வழியாக வந்த மற்றொரு காரும் மோதியது. இதில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 5 பேர் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தின் காரணமாக, அப்பகுதியில், 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

No comments:

Powered by Blogger.