Header Ads

இலங்கை தீர்மானம்: மத்திய அரசுக்கு, சீமான்– தமிழருவி மணியன் கண்டனம்

ஐ.நா. மனித உரிமை கவுன்சில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த போர்க்குற்ற விசாரணை குறித்த தீர்மானத்தை இந்தியா உள்ளிட்ட 12 நாடுகள் புறக்கணித்துள்ளன. இருப்பினும் இந்த தீர்மானம் அமெரிக்க, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 23 நாடுகளின் ஆதரவுடன் வெற்றி பெற்றது.

இதைத்தொடர்ந்து இலங்கைக்கு எதிரான சர்வதேச போர்க்குற்ற விசாரணை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விசாரணையின் முடிவில் இலங்கையின் சுயரூபம் வெட்ட வெளிச்ச மாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீர்மானத்தை புறக்கணித்தது ஏன் என்பது பற்றி விளக்கி கூறிய ஐ.நா. மனித உரிமை கவுன்சிலுக்கு இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி திலீப்சின்கா, சர்வதேச விசாரணை என்பது இலங்கையின் இறையாண்மையை குறைத்து மதிப்பதாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் இந்த முடிவுக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. குறிப்பாக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், தேர்தல் பிரசாரத்தின்போது இதனை குறிப்பிட்டு பேசினார். அப்போது மத்திய அரசின் முடிவுக்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.

தமிழ் ஆர்வலர்கள் பலரும் மத்திய அரசின் முடிவுக்கு ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறியதாவது:–

ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டும் என்றுதான் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருக்கிறோம். உலக நாடுகள் இதனை இனப் படுகொலையாக பார்க்க தவறி விட்டன. அதனால்தான் குற்றவாளியான இலங்கையிடம் நீங்களே விசாரித்துக் கொள்ளுங்கள் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஆரம்பத்தில் கூறின. ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவிபிள்ளையின் அறிக்கைக்கு பின்னர்தான் பன்னாட்டு விசாரணைக்கு உத்தரவிட கோரிய தீர்மானம் ஐ.நா. மன்றத்தில் கொண்டு வரப்பட்டு நிறை வேற்றப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை புறக்கணித்ததன் மூலம் தமிழர்களுக்கு இந்தியா மீண்டும் மிகப்பெரிய துரோகத்தை செய்துள்ளது. போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணையை நடத்தினால் இந்தியா செய்த உதவிகளும் வெளிச்சத்துக்கு வந்துவிடும் என்று பயந்தே மத்திய அரசு அதனை புறக்கணித்துள்ளது.

நமக்கு சம்பந்தமே இல்லாத அமெரிக்காவும், இங்கிலாந்தும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்த நிலையில் இந்தியா திட்டமிட்டே இப்புறக் கணிப்பில் ஈடுபட்டது கண்டிக்கத்தக்கது. சர்வதேச விசாரணையின் மூலம் இலங்கையில் நடந்தது இனஅழிப்புதான் என்பது உறுதியாகிறது. அப்படி ஒரு சூழல் ஏற்படும்போது, ஒரு இனத்தை அழித்த இனத்துடன் இன்னொரு இனம் சேர்ந்து வாழ முடியாத நிலை ஏற்படும். அப்போது தனிஈழம் உருவாக வழிபிறக்கும்.

இவ்வாறு சீமான் கூறினார்.

காந்திய மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் கூறியதாவது:–

இலங்கையில் தமிழர்களை சமமாக நடத்துவதற்கு சிங்களர்கள் தயாராக இல்லை. இலங்கை ராணுவமும், போலீசும், சிங்கள மயமாகவே உள்ளது. சிங்கள மொழிக்கு இணையாக தமிழர் மொழிக்கு எந்த தகுதியுமே இல்லை. அப்படி சமத்துவம் இல்லாத இடத்தில் சகோதரத்துவம் இருக்க வாய்ப்பு இல்லை. போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களை விட இன அழிப்பே மன்னிக்க முடியாத குற்றமாகும்.

மத்திய அரசை பொறுத்த வரை தொடர்ந்து தமிழர்களுக்கு துரோகம் செய்வதையே கொள்கையாக கொண்டுள்ளது.

இதற்கு முன்னர் தமிழகத்தில் ஏற்பட்ட மக்கள் கிளர்ச்சியின் காரணமாகவே ஐ.நா.வில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை இந்தியா ஆதரித்தது. தற்போது அதுபோன்று பெரிய நிர்ப்பந்தங்கள் எதுவும் ஏற்படவில்லை,

இந்தியாவில் மாநிலங்களுக்கு இருக்கும் அதிகாரங்களை போல வடக்கு கிழக்கு பகுதியில் அதிகாரங்களை பெற்றுத் தருவதற்கு கூட மத்திய அரசு முன்வரவில்லை, எப்போதும் போல தமிழர்களுக்கு துரோகம் செய்து விட்டது.

சிதம்பரத்தை பொறுத்த வரையில் சிவகங்கை தொகுதியில் மகன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத்தான், மத்திய அரசு இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று கூறியிருப்பதாக கருதுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Powered by Blogger.