Header Ads

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பதவி: டோனி விலக விருப்பம்

6–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற ‘ஸ்பாட்பிக்சிங்’ சூதாட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி முகுல் முட்கல் கமிட்டி சூதாட்டம் குறித்து விசாரணை நடத்தியது.

அந்த கமிட்டியின் அறிக்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ்குந்த்ரா ஆகியோருக்கு சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதனால் இந்த இரு அணிகளையும் 7–வது ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்க அனுமதிக்க கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் பரிந்துரை செய்தது. ஆனால் நேற்று இந்த இரு அணிகளும் விளையாட சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியது.

இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் டோனி ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும் உள்ளார். இந்த சூதாட்ட வழக்கில் அவரது பெயரும் அடிப்பட்டதால் அவர் அதிருப்தி அடைந்து உள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டில் நடந்த விசாரணையின் போது குருநாத் மெய்யப்பன் பற்றி டோனி பொய்யான தகவலை முட்கல் கமிட்டியிடம் தெரிவித்ததாக பீகார் கிரிக்கெட் சங்க செயலாளர் ஆதித்யா வர்மாவின் வக்கீல் ஹரீஸ் சால்வே குற்றம் சாட்டினார்.

இந்த தகவலால் டாக்காவில் 20 ஓவர் உலக கோப்பையில் விளையாடும் இந்திய அணி கேப்டன் டோனி அதிருப்தியும், ஏமாற்றமும் அடைந்தார். சூதாட்ட சர்ச்சையில் தனது பெயரை தேவையில்லாமல் இழுத்ததால் அவர் எரிச்சல் அடைந்தார். இதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மற்றும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணை தலைவர் பதவியில் இருந்து விலக டோனி முடிவு செய்தார்.

இது தொடர்பாக டோனி இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன உரிமையாளரும், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருந்து ஒதுங்கி இருப்பவருமான என்.சீனிவாசனிடம் போனில் ஆலோசனை செய்தார்.

அப்போது இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன துணைத்தலைவர் பதவியில் இருந்து விலகுவதாகவும், இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று டோனி கூறியுள்ளார்.

மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாகவும் டோனி தெரிவித்து இருக்கிறார். ஆனால் இதை என்.சீனிவாசன் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. மேலும் விவாதித்து இது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 முறை ஐ.பி.எல். கோப்பையை வெல்வதற்கு டோனி தான் காரணம். இதனால் அவர் அணியின் சொத்தாக கருதப்படுகிறார். ஐ.பி.எல். போட்டிகளில் சென்னை அணியின் சிறப்பான செயல்பாட்டுக்கு டோனியின் தலைமையே காரணமாகும்.

இதனால் கேப்டன் பதவியில் இருந்து அவரது விலகலை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொள்ளாது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள். 

No comments:

Powered by Blogger.