Header Ads

காங்கிரசுடன் கூட்டணி சேர தொண்டர்கள் விரும்பவில்லை: மு.க.ஸ்டாலின்

பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஒரு ஆங்கில பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:–

கேள்வி:– உங்கள் முன்னாள் கூட்டணி கட்சியான காங்கிரசின் எதிர்காலம் கேள்வி குறியாகியுள்ள நிலையில் தி.மு.கவின் எதிர்கால அணுகுமுறை எப்படி இருக்கும்?-

பதில்:– டெல்லியில் யார் ஆட்சி அமைப்பது என்பதை தீர்மானிக்கும் இடத்தில் கலைஞர் தொடர்ந்து இருந்து வருகிறார். பல கட்சிகளும் அதன் தலைமைகளும் சுயநலத்துடனும் அதிகார வெறியுடனும் பிரதமர் கனவுடனும் இருக்கின்றன. அவர்களுக்கிடையே மோதல்களும் நிலவுகின்றன. நாட்டு நலனுடன் ஒரு நிலையான மதசார்பற்ற அரசு மத்தியில் அமைவதே இந்தியாவுக்கு நல்லது. அத்தகைய அரசு மத்தியில் அமைவதற்கு தி.மு.க ஏற்கனவே வழிகாட்டியிருக்கிறது. துணை நின்றிருக்கிறது. இப்போதும் அதுபோலவே செயல்படும்.

மத்தியில் “நிலையான ஆட்சிக்கு” ஆக்கபூர்வமான ஆதரவு அளிப்பது தி.மு.க என்ற இமேஜ் தேசிய அரசியலில் இருப்பதால், அடுத்த பிரதமர் யார் என்பதை தீர்மானிப்பதில் கலைஞர் முக்கியப் பங்கு வகிப்பார். தமிழக கட்சிகளின் தயவுதான் தேசிய கட்சிகளுக்குத் தேவைப்படுகிறதே தவிர, தேசிய கட்சிகளால் இங்கு மாநிலக் கட்சிகள் வெற்றிபெறும் சூழல் இல்லை. எனவே தேசிய கட்சிகளை நம்பி தி.மு.க இல்லை.

கேள்வி :– காங்கிரசுடன் கூட்டணி வைத்தால் நடந்ததை மறந்துவிட்டு தி.மு.க தொண்டர்கள் காங்கிரசுடன் இணைந்து பணியாற்றுவார்களா?

பதில்:– தமிழர்களின் உணர்வுடன் தொடர்புடைய ஈழப் பிரச்சினை, தமிழக மீனவர்கள் பிரச்சினை ஆகியவற்றில் மத்தியில் உள்ள காங்கிரஸ் நடந்து கொண்ட விதம் கழகத்தினர் அனைவருக்கும் அதிருப்தியைத் தந்திருக்கிறது.

கழகத்தின் கடைசி தொண்டனின் மனநிலையையும் உணர்ந்தே கூட்டணி பற்றிய தெளிவான முடிவை தி.மு.க. பொதுக்குழு ஏற்கனவே எடுத்திருக்கிறது. அதை கலைஞர் அறிவித்திருக்கிறார். கலைஞர் எடுக்கும் எந்த முடிவுக்கும் கட்டுப் படக் கூடியவர்கள்தான் கழகத் தொண்டர்கள். ஆகவே யூகத்தின் அடிப்படையிலான கேள்விக்கு பதில் அளிப்பது பொருத்தமாக இருக்காது.

கேள்வி:– திமுக கூட்டணி பலமானதா?

பதில்:– தி.மு.கவும் பலமானது. அதன் கூட்டணியும் பலமானது. ஏற்காடு இடைத் தேர்தலில் ஆளுங்கட்சியின் அத்துமீறல்களை எல்லாம் தாண்டி எங்கள் வேட்பாளர் பெற்ற வாக்குகள் தி.மு.க. பலமாக இருப்பதை பறைசாற்றியிருக்கிறது. அப்படிப்பட்ட பலமான தி.மு.க. தேசியகட்சிகள் இல்லாத வலுவான கூட்டணியையும் உருவாக்கியிருக்கிறது. இந்த கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்.

கேள்வி:–அ.தி.மு.க. இலவச திட்டங்களை அறிவித்திருக்கிறது.? அதற்கு போட்டியாக நீங்களும் அறிவிப்பீர்களா?

பதில்:– அளித்த வாக்குறுதிகளுக்கும் அதிகமாகவே பல திட்டங்களை நிறைவேற்றியது கலைஞர் தலைமையிலான தி.மு.க அரசு. ஆனால் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட மாட்டாது. ஒரேயொரு உதாரணத்தைச் சொல்கிறேன். 2011 சட்ட மன்றத் தேர்தலின் போது இளைஞர்கள் 87 லட்சத்து 75 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவோம் என்று வாக்குறுதி கொடுத்தார் ஜெயலலிதா. 

இந்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. 2011ல் இருந்து மூன்று வருடமாக “வாக்குறுதிகளாக” தேர்தல் அறிக்கையிலேயே அது அப்படியே உறங்கிக் கொண்டிருக்கிறது.

கேள்வி:– ஜெயலலிதா பிரதமர் வேட்பாளர் என்று தன்னை முன்னிறுத்துவது அதிக வாக்குகளை பெற்று தருமா?

பதில்:– ஜெயலலிதாவிற்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் மத்தியில் நிலையற்ற ஆட்சிக்கு அளிக்கும் வாக்கு என்பதை தமிழக மக்கள் மிக நன்றாகவே புரிந்து வைத்துள்ளார்கள். 1999-ல் பிரதமராக இருந்த வாஜ்பாய் அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக சொல்லி தினந்தோறும் மிரட்டிவந்தார். வாஜ்பாய் ஆட்சியை கவிழ்த்த பிறகு நடைபெற்ற மூன்று பாராளுமன்றத் தேர்தல்களிலும் அ.தி.மு.க.வை மக்கள் நிராகரித்திருக்கிறார்கள். அதே நிலைமைதான் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலிலும் ஜெயலலிதாவிற்கு நேரிடும்.

கேள்வி:– ஜெயலலிதா மீது சொத்துக்குவிப்பு வழக்கைத் தவிர வேறு எதுவும் மக்களிடம் அதிருப்தி இல்லை. அவருக்கு எதிராக எப்படி பிரச்சாரம் செய்யப்போகிறீர்கள்?

பதில்:– ஜெயலலிதா மீது அதிருப்தி இல்லை என்று சொல்வது தவறு. ஜெயலலிதா அரசு வெளியிட்ட அறிவிப்புகள் கடந்த மூன்று வருடங்களில் 3601. அவற்றுள் 2013 டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி வரை 2695 அறிவிப்புகள் நிறைவேற்றப்படாமல் “வெறும் அறிவிப்புகளாகவே” கிடக்கின்றன. மின்வெட்டு, பொருளாதார வீழ்ச்சி, உள்ளிட்டவைகளை மக்களிடம் பிரச்சாரம் செய்வோம்.

கேள்வி:– தேசிய கட்சிகளுடன் கூட்டணியை மீண்டும் பரிசீலிக்க வாய்ப்பிருக்கிறதா?

பதில்:– தமிழக நலனை மனதில் வைத்தும், இந்திய ஜனநாயகத்தைக் காப்பாற்றவும்தான் தலைவர் கலைஞர் எப்போதுமே தேசிய அளவில் கூட்டணி வைப்பார். ஆகவே தேர்தலுக்குப் பிறகு அது பற்றி கலைஞர் முடிவு எடுப்பார்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

No comments:

Powered by Blogger.