Header Ads

நினைத்தது யாரோ விமர்சனம்

நடிகர் : ரெஜித் மேனன்நடிகை : நிமிஷா சுரேஷ்இயக்குனர் : விக்ரமன்இசை : பால்ராஜ்ஓளிப்பதிவு : ஆர்.கே.பிரதாப்
தமிழ் சினிமாவில் தற்போதுள்ள முன்னணி நடிகர்களுக்கு தனது படம் மூலம் ஒரு தனி அடையாளத்தைக் கொடுத்தவர் இயக்குனர் விக்ரமன். ‘பூவே உனக்காக’, ‘உன்னை நினைத்து’ ஆகிய படங்களில் காதலை வித்தியாசமான கோணத்தில் சொல்லி அனைவரையும் ரசிக்க வைத்தவர். அப்படிப்பட்டவரா இப்படியொரு காதல் படத்தை எடுத்தார் என்று படத்தின் ஆரம்பக் காட்சிகளிலே யோசிக்க வைத்துவிட்டார். சரி, கதைக்குள் செல்வோம்.

காதலில் தோல்வியடைந்த 5 பேர் ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு காதலிக்கவும் பிடிக்காது, காதலிப்பவர்களையும் பிடிக்காது. இவர்கள் ஒருநாள், காதல் படங்களையே தேர்வு செய்து படம் எடுத்து வரும் இயக்குனர் ரெஜித்தை சந்திக்கின்றனர். 

அவரிடம் காதல் என்பது உண்மையானது அல்ல, அப்படியிருக்கும்போது காதல் படங்களை தாங்கள் எடுத்து வருவது அபத்தமானது என முறையிடுகின்றனர். அதற்கு அவர் ‘காதல் என்பது தவறானது இல்லை, காதலிக்கிறவர்கள் தவறானவர்களாக இருக்கிறார்கள்’ என்ற உண்மையை அவர்களுக்கு விளக்குகிறார். காதலால் தான் எப்படி உயர்ந்தேன் என்ற உண்மையையும் அவர்களுக்கு எடுத்துக்கூறுகிறார். இதையே படத்தின் கருவாக வைத்து 3 மணி நேர சினிமாவாக எடுத்திருக்கிறார் இயக்குனர் விக்ரமன். 

படத்தின் பெரும்பாலான காட்சிகளை ஏதோ புதுமுக இயக்குனர் இயக்கிய படங்களைப்போல் காட்சிப்படுத்தி அனைவரையும் விரக்தியில் ஆழ்த்தியிருக்கிறார் இயக்குனர் விக்ரமன். படத்தில் நாயகன் முதல் தொழில்நுட்ப கலைஞர்கள் வரை அனைவரும் புதுமுகங்கள் என்பதால் இதற்குமேல் யோசிக்கவேண்டாம் என்று விட்டுவிட்டார் போலும்.

விக்ரமனின் பெரும்பாலான படங்களில் நாயகன் ஒரே பாடலில் பெரிய ஆளாக ஆகிவிடுவார். இதனை ரசிகர்கள் விமர்சிக்கிறார்கள் என்பதற்காக இந்த படத்தில் நாயகன் பெரிய இயக்குனராக வருவதை ஒரு பாடல், அதன்பிறகு சில காட்சிகளை படம்பிடிப்பது என நீண்டுகொண்டே காட்சிகள் அமைத்திருந்ததும் போரடிக்கவே செய்கிறது. 

காதலித்து தோல்வியுற்றால் குடி, முகத்தில் தாடி என்ற தமிழ் சினிமாவின் இலக்கணத்திற்கு இவரும் விதிவிலக்கல்ல. இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்றமாதிரி லிவிங் டுகெதர் என்பதை கதையில் விளக்கும் விக்ரமன், இதில் எப்படி கோட்டைவிட்டார் என்பது தெரியவில்லை. விக்ரமன் படங்களுக்கே உரித்தான உதாரண வசனங்கள் இப்படத்தில் இல்லாதது வருத்தமே. 

ஐடி கம்பெனி வளாகத்தையே நகரம்போல் காட்ட முயற்சித்துள்ளார். ஆனால், சிமெண்ட் ரோடு, தனித்தனியாக உயர்ந்து நிற்கும் பளபள கட்டிடங்கள் என அவை நகரங்களை நினைவுபடுத்தாமல் ஐடி கம்பெனிகளை அப்பட்டமாக காட்டியிருக்கிறது. இவற்றையெல்லாம் ஒரு பெரிய இயக்குனரான இவர், எப்படி கவனிக்காமல் விட்டார் என்பது நமக்கு ஆச்சர்யத்தையே ஏற்படுத்துகிறது. அதேபோல், ஹோலி விழா என்று ஒரு வட்டம் போட்டு அதற்குள்ளேயே ஒரு 4 பேர் கலர் பொடிகளை தூவுவது என்பன போன்ற காட்சிகள் ரொம்பவும் அபத்தமாக உள்ளது.

நாயகன் ரெஜித் கதாநாயகனுக்குண்டான தோற்றத்துடன் அழகாக இருக்கிறார். கதாநாயகி நிமிஷா அறிமுகமான முதல் படமாக இருந்தாலும் ஓரளவு திறமை காட்டியிருக்கிறார். மற்றபடி எந்த கதாபாத்திரங்களும் பேசும்படியாக இல்லை. 

விக்ரமன் படங்களில் கதைக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்குமோ அதேபோல் பாடலும், பின்னணி இசையும் ரொம்பவும் பேசப்படும். ஆனால், இந்த படத்தில் பின்னணி இசை நிறைய இடங்களில் நிசப்தமாக உள்ளது. பாடல்களில் ‘கைரேகை போலத்தான் காதல்’ என்ற பாடல் மட்டும் முணுமுணுக்கும் ரகம். மற்ற பாடல்கள் ரசிக்கும்படியாக இல்லை.

மொத்தத்தில் ‘நினைத்தது யாரோ’ நினைவில் இல்லை.

No comments:

Powered by Blogger.