Header Ads

நான் திருமணம் செய்வதற்கு முன்பிலிருந்து அவருடன்….அதிர்ச்சி தகவலுடன் இளம்பெண்.

நான் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறேன். என் கணவர் பி.இ. படித்துள்ளார். எங்களுடையது காதல் திருமணம். சிறுவயது முதல் அவரை எனக்குத் தெரியும். எப்போதும் எல்லோரிடமும் சிரித்துப் பேசி, கலகலப்பாகப் பழகக் கூடியவர். எதற்கும் கவலைப்பட மாட்டார். எந்தக் கெட்டப்பழக்கங்களும் இல்லாதவர். யாரிடமும் வம்புச் சண்டைகளுக்குப் போகாதவர். இப்படி அவரது எல்லா குணங்களும் தெரிந்துதான் அவரை விரும்பினேன்.

காதலித்த காலத்தில் அவரது நடவடிக்கைகள் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தன. அவர் எந்த வேலையையும் கஷ்டப்பட்டு செய்து நான் பார்த்ததே இல்லை. பரீட்சைக்குக்கூட கடைசி 2 நாட்கள்தான் படிப்பார். ஆனால், நிறைய மதிப்பெண்களுடன் பாஸ் செய்து விடுவார். அதே போல அவரது வீட்டிலும் எந்தப் பிரச்னை என்றாலும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் சிரித்துக் கொண்டே இருப்பார். நானோ அவருக்கு அப்படியே நேரெதிர். சின்னச் சின்ன விஷயங்களைக் கூட சீரியஸாக எடுத்துக் கொண்டு, வருத்தப்பட்டுக் கொண்டே இருப்பேன்.



என்னுடைய இந்த சுபாவத்துக்காகவே அவரை அதிகம் விரும்பினேன். அவரைத் திருமணம் செய்து கொண்டால், காலம் முழுக்க என்னைக் கண் கலங்காமல் பார்த்துக் கொள்வார் என நம்பினேன். ஆனால், திருமணம் முடிந்த சமீப காலமாக அவரது நடவடிக்கைகள் எனக்கு வெறுப்பையும், சலிப்பையும் தருகின்றன.

3 மாதங்களுக்கு மேல் எந்த ஒரு வேலையிலும் நிலையாக இருப்பதில்லை. கேட்டால், ‘இதெல்லாம் ஒரு வேலையா? என் அறிவுக்கும், திறமைக்கும் நான் எங்கேயோ இருக்க வேண்டும்’ எனக் கூறிக் கொண்டு திரிகிறார்.

யோசித்துப் பார்த்தால் கல்யாணத்துக்கு முன்பு கூட அவர் இதே சுபாவத்தில்தான் இருந்திருக்கிறார் எனத் தெரிகிறது. திருமணத்துக்கு முன்பு அவரிடம் நான் ரசித்த எந்த விஷயமும் இப்போது கோபத்தையும், வெறுப்பையுமே தருகிறது. இதற்கு என்னதான் காரணம்? – வசந்தி, சென்னை.



அன்புச் சகோதரி, உங்கள் கணவருக்கு இருப்பது நம் நாட்டு இளைஞர்களில் பெரும்பாலானோருக்கு இருக்கக் கூடிய சோஷியல் ஸ்டிக்மா எனப்படுகிற தவறான சமூக நெருக்கடியாலும், தெளிவற்ற மனநிலையினாலும் வரக்கூடிய அறிவு வளர்ச்சியில் ஏற்படும் ஒருவித இடைக்காலத் தடையாகும். ‘ஆம்பிளைன்னா அழக்கூடாது…

பொம்பிளைன்னா சிரிக்கக் கூடாது’ என்கிற மாதிரி, நம் சமூகத்தில் காலங்காலமாக வேரூன்றியிருக்கும் கட்டளைகளின் விளைவினாலும், எதையும் லேசாக எடுத்துக் கொண்டு இளமைக்கால போதையிலேயே மனம் மயங்கி, வளராமல் நின்றுவிடுவதாலும் ஏற்படக் கூடிய ஒருவித அறிவு வளர்ச்சிக் குறைபாடாகும்.

இத்தகையவர்கள் மற்றவர்கள் தம்மைப் பெருமையாக நினைக்க வேண்டும் என்பதற்காகவே எல்லா விஷயங்களிலும் வெட்டி பந்தா பண்ணிக் கொண்டு திரிவார்கள். குடும்பப் பிரச்னைகள் தம்மை வாட்டி வதைத்தாலும்,

அதை வெளியே காட்டிக் கொண்டால் மற்றவர்கள் தம்மைப் பற்றித் தவறாக நினைத்து விடுவார்களோ என வெளியில் சிரித்துப் பேசி மழுப்பிக் கொண்டிருப்பார்கள். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் 25 வயது வரை இது போன்ற சுபாவங்கள் இருப்பின், அது மிகவும் இயல்பான, ஆரோக்கியமான மன வளர்ச்சியே.

அதுவே 25 வயதுக்கு மேலும் தொடர்ந்தால், அது அவருக்கு மட்டுமின்றி, அவரைச் சார்ந்த அனைவருக்கும் அதாவது, வயதுக்கேற்ற சரியான அறிவு வளர்ச்சி உள்ள யாருக்கும் பிரச்னைகளையே தரும்.

வேலைக்குச் சென்றால் எங்கே தன் மீது பொறுப்புகளை ஏற்றி விடுவார்களோ என அதைத் தவிர்ப்பார்கள். இவர்களை இப்படியே விட்டால் 35 வயதுக்கு மேல், தனக்கு நேரமே சரியில்லை எனக் கூறிக் கொண்டோ,

பரிகாரம் பண்ணிக் கொண்டோ, அரிதாக சிலர் வாழ்க்கையை மாய்த்துக் கொள்ளும் முடிவுக்குப் போகவோ நேரலாம். எனவே, உங்கள் கணவருக்கு உடனடியாக ஒரு உளவியல் ஆலோசனை அவசியம். தாமதிக்காமல் மனநல ஆலோசகரை அணுகுங்கள். எல்லாம் சரியாக வாழ்த்துகள்.

No comments:

Powered by Blogger.