Header Ads

ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்டு இறந்த மாணவியின் முதலாண்டு நினைவு தினம்: மெழுகுவர்த்தி ஏந்தி டெல்லியில் அஞ்சலி

டெல்லியில் உள்ள ஒரு கல்லூரியில் பிசியோதெரபி படித்து வந்த 23 வயது மருத்துவ மாணவி தன் நண்பரான சாப்ட்வேர் என்ஜினீயருடன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16-ம் தேதி தெற்கு டெல்லியில் உள்ள ஒரு தியேட்டருக்கு சினிமா பார்க்க சென்றார். இரவு 9.30 மணிக்கு வெளியில் வந்த அவர்களுக்கு வீடு திரும்ப ஆட்டோ கிடைக்கவில்லை. அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ்சில் அவர்கள் ஏறினார்கள்.
 
பஸ்சில் டிரைவர் ராம்சிங்கும் அவனது கூட்டாளிகள் 5 பேர் இருந்தனர். அவர்கள் மாணவியை கிண்டல் செய்தனர். அதை மாணவியின் நண்பர் தட்டி கேட்டார். இதனால் அவர்களுக்குள் கை-கலப்பு, மோதல் ஏற்பட்டது. பஸ்சில் இருந்த பழைய இரும்பு கம்பிகளை எடுத்து சாப்ட்வேர் என்ஜினீயரை சரமாரியாக தாக்கினார்கள். இதை மாணவி தடுத்தார். மது போதையில் இருந்த அந்த வாலிபர்கள் கண் மூடித்தனமாக இருவரையும் தாக்கினார்கள். தலையில் அடிபட்ட சாப்ட்வேர் என்ஜினீயர் மயங்கி விழுந்தார்.
 
இதையடுத்து மாணவி அவர்களை கடுமையாக திட்டினார். பஸ்சை நிறுத்தும்படி கூச்சலிட்டார். இதனால் கோபம் அடைந்த வாலிபர்கள், மாணவியை மீண்டும் இரும்பு கம்பியால் தாக்கினார்கள். ஒருவன் மாணவி வயிற்றில் கம்பியால் குத்தினான். இதில் மாணவி சுருண்டு விழுந்தார். போதையில் இருந்த வாலிபர்கள் ஈவு இரக்கமின்றி மாணவியை கற்பழித்தனர்.
 
சுமார் 30 நிமிடம் அந்த பஸ் டெல்லி சாலையில் ஓடிய நிலையில், மாணவி சின்னா பின்னமாக்கப்பட்டார். காம இச்சையை தீர்த்துக் கொண்ட 6 பேரும் 10.35 மணியளவில் ஓடும் பஸ்சில் இருந்து மாணவியையும், அவரது நண்பரையும் சாலையோரத்தில் தள்ளிவிட்டு சென்றனர்.
 
சாலையோரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர்களை, அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசில் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் மாணவியையும், அவரது நண்பரையும் மீட்டு டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
 
டெல்லி மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட சம்பவம் மறுநாள் காலை பரபரப்புடன் இணையத்தளங்களில் வெளியானது. மாணவிக்கு மயக்க நிலையில் செயற்கை சுவாசத்துடன், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மாணவியின் நண்பர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதன் மூலம் குற்றவாளிகள் பற்றிய விவரம் தெரிய வந்தது. டெல்லி போலீசார் தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடினார்கள்.

சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மாணவியின் உடல்நிலை மிக, மிக கவலைக்கிடமாக மாறியது. துருபிடித்த இரும்பு கம்பியால் தாக்கியதில் மாணவி குடல் கிழிந்து அழுகி விட்டிருப்பது தெரிய வந்தது. இதனால் டாக்டர்கள் மிகப்பெரிய அறுவை சிகிச்சை செய்து மாணவி சிறுகுடலை அகற்றினார்கள். அன்றே அடுத்தடுத்து மேலும் 2 ஆபரேஷன்கள் செய்யப்பட்டன.

இதற்கிடையே, சப்தர்ஜங் மருத்துவமனை டாக்டர்கள் கொடுத்த சிகிச்சையால் மாணவி மயக்கம் தெளிந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட செயற்கை சுவாசம் விலக்கப்பட்டது. அவரிடம் டெல்லி மாஜிஸ்திரேட் மரணவாக்குமூலம் வாங்கினார்.
 
அப்போது அந்த மருத்துவ மாணவி, நான் உயிர் வாழ ஆசைப்படுகிறேன். எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள். குற்றவாளிகளை தப்பவிட்டு விடாதீர்கள் என்றார். 

டிசம்பர் 25-ம் தேதி அவரது நுரையீரலில் கிருமி தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு மேலும் 2 ஆபரேஷன்கள் செய்யப்பட்டன. 26-ம் தேதி மருத்துவ மாணவி உடல் நிலை மிகவும் மோசமானது. அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் ஆஸ்பத்திரி டாக்டர்களை வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடர்பு கொண்டு ஆலோசித்தனர். அதன்பிறகு மாணவியை சிங்கப்பூர் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. மாணவி பெற்றோர், சகோதரர்களுக்கு மத்திய அரசு உடனடியாக பாஸ்போர்ட், விசா வழங்கியது.
 
26-ம் தேதி இரவு சிறப்பு ஏர்- ஆம்புலன்ஸ் விமானம் மூலம் மாணவி டெல்லியில் இருந்து சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த ஏர்-ஆம்புலன்ஸ் விமானத்துக்கு மட்டும் கட்டணமாக 60 லட்சம் ரூபாயை மத்திய அரசு வழங்கியது. மாணவியுடன் 2 டெல்லி டாக்டர்களும் சிங்கப்பூர் சென்றனர். சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரக அதிகாரி ராகவன் தலைமையில் அதிகாரிகள் குழு மாணவி சிகிச்சைக்கான எல்லா உதவிகளையும் செய்தது.
 
டிசம்பர் 27-ம் தேதி அதிகாலை சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் மாணவி சேர்க்கப்பட்டார். உடனடியாக அவருக்கு நவீன சி.டி.ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது. அப்போது மாணவி தலைமையில் காயம் ஏற்பட்டு இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்தனர். மாணவி உடல்நிலை மிக, மிக மோசமாக இருப்பதாக சிங்கப்பூர் டாக்டர்கள் அறிவித்தனர்.
 
டிசம்பர் 28-ம் தேதியன்று மாணவி கொண்டு வரப்படும் போது மாரடைப்பு ஏற்பட்ட தகவல் வெளியானது. மாணவி உடல் உள்உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல்இழக்க தொடங்கின. மாணவி குடல், நுரையீரலில் கிருமி தொற்றுக்கள் அதிகம் ஏற்பட்டது. மாணவி உயிரைக் காப்பாற்ற டாக்டர்கள் தீவிரமாக போராடினார்கள்.
 
இருப்பினும், சிகிச்சை பலனின்றி 29-ம் தேதி அதிகாலை 2.15 மணிக்கு அவர் மரணம் அடைந்தார்.

அவர் இறந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்த நிலையில் உத்தரபிரதேசம் மாநிலம் பாலியா மாவட்டத்தில் உள்ள மாணவியின் சொந்த கிராமத்தில் அவரது பெற்றோர், உறவினர், ஊர் மக்கள் என நூற்றுக்கணக்கானோர் கையில் தீபங்களை ஏந்தியபடி, அவரது ஆன்மா சாந்தியடைய பிராத்தனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதேபோல், தலைநகர் டெல்லியிலும் ஜந்தர் மந்தர் உள்ளிட்ட பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான பெண்களும், பொது மக்களும் மெழுகுவர்த்தி ஏந்தியபடி மவுனமாக நின்று நினைவஞ்சலி செலுத்தினர். 

No comments:

Powered by Blogger.