Header Ads

செல்போன் விபரீதம் பெண்கள் ஜாக்கிரதை

நாணயத்துக்கு இருபக்கம் இருப்பது போல் தொழில்நுட்பத்துக்கும் உண்டு. அதற்கு உதாரணம் செல்போன். கூலித் தொழிலாளி முதல் தொழிலதிபர் வரை இன்று அனைவரின் கையிலும் தவழ்கிறது செல்போன். உலகின் எந்த மூலையில் இருந்தாலும் மகள் சாப்பிட்டாளா? தாத்தாவுக்கு உடம்பு எப்படி இருக்கு? சரக்கு டெலிவரி ஆகிவிட்டதா?என்று பேச, ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கு சிறிதும் தாமதிக்காமல் உதவிட என்று அனைத்து தரப்பினருக்கும் ஆபத்பாந்தவனாக இருக்கிறது. 

ஆனாலும் இந்த செல்போன்கள் எதிர்விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. இதில் பாதிக்கப்படுபவர்கள் குறிப்பாகப் பெண்கள் தான். 
 எம்.எம்.எஸ், அறிவியலின் அற்புத தொழில்நுட்பம் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. ஆனால், சில விஷமிகள் தோழிகளாக பழகும் பெண்களை ஆபாச படம் பிடிக்கவும், பயமுறுத்தவும் இதைப் பயன்படுத்துகின்றனர். இதனால், பல பெண்களின் வாழ்க்கைச் சீரழிவது தொழில் நுட்பக் கொடுமை.
ஆண்களை விட இளம் பெண்கள் அதிகம் செல்லின் வசம் அடிமையாகிக் கிடக்கின்றனர் என்கிறது ஒரு ஆய்வு.

ஓயாத செல் பேச்சு, எந்நேரமும் மெசேஜ் எனத் திரியும் பெண்கள் அதனாலே பல தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள். ‘ஹாய்‘ என்று ஒரு சின்னஞ்சிறு குறுஞ்செய்தியில் ஆரம்பிக்கும் ஆண் பெண் தொடர்பு தற்கொலை, கொலை போன்ற அசாதாரண சம்பவங்களில் முடிவதில் பெரும்பங்கு செல்லுக்குத் தான். செல்லில் இருக்கும் மிஸ்டு காலை பார்த்து பேச ஆரம்பித்து பிறகு அந்த அறிமுகம் இல்லாத நபரிடமிருந்து தொடர் குறுஞ்செய்திகள், போன்கால்கள் என வம்பில் மாட்டிக் கொள்கிறார்கள் பல பெண்கள். பெற்றோர்கள் கவனமின்மையும் இதற்கு ஒரு முக்கிய காரணமாகும். 
  செல்லில்பேசிக்கொண்டே தண்டவாளத்தைக் கடக்க முயன்று ரயில் மோதி உயிரிழந்த சம்பவங்கள் தினமும் தொடர்கதையாகவே உள்ளது. பம்பர் லாட்டரி, பரிசு,  என்று வரும் மெசேஜைப் பார்த்து ஏமாந்து பணத்தை பறிகொடுத்துவிட்டு, கமிஷனர் அலுவலகம் வரும் அப்பாவிகள் ஏராளம். 
அதீத செல்போன் பழக்கத்தினால் தூக்கமின்மை, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு பெண்கள் ஆளாகின்றனர். அளவுக்கதிகமான செல்போன் பயன்படுத்தும் பழக்கம் கேன்சரில் முடிவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  

பெண்களை ஏமாற்ற இத்தகைய செயல்களில் இளைஞர்கள் ஈடுபடுவதை தடுக்க அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆனால் அது மட்டும் போதாது எந்நேரமும் அரசாங்கம் பெண்கள் பின்னே நிற்க முடியாது என்பதால் இதுகுறித்து பெண்களிடையே மிகுந்த விழிப்புணர்ச்சி ஏற்படுவது தான் இதற்கான சிறந்த தீர்வாக இருக்கமுடியும். 

பெற்றோரின் கண்காணிப்பின்றி நகரங்களில் தங்கி படிக்கும், வேலை பார்க்கும் பெண்கள் தான் செல்லால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 
குடும்பத்திற்கு தெரியாமல் ரகசிய செய்கைகளில் ஈடுபடுவது அவர்களை ஆபத்திற்குள்ளாக்கும் என்பதை பெண்கள் உணரவேண்டும். அதனால், தேவையற்ற நபர்களின் எஸ்.எம்.எஸ்க்குப் பதில் அளிக்காதீர்கள். காதலன் தானே, பாய்பிரண்ட் தானே என்று அலட்சியப்பேச்சும் வேண்டாம். உங்களுக்குள் பிரிவு ஏற்படும் போது அது உங்களை படுகுழியில் தள்ளிவிடும். பெண்களுக்கு பெரும் பாதிப்புகளை உண்டாக்கும் இத்தகைய பேச்சுகளை பெண்கள் தவிர்க்கவேண்டும். 

அறிமுகம் இல்லாத நபர்களிடம் உங்கள் செல்போன் எண்ணை பகிர்ந்துகொள்வதை தவிர்த்துவிடுங்கள். தேவையற்ற நபர்களிடம் தேவையற்ற பேச்சுக்கள் அறவே வேண்டாம். அறிமுகம் இல்லாத, அவ்வளவாக பழக்கமில்லாத நபர்களிடம் சொந்த தகவல்களை பகிர்வது, வீட்டுக்குள் அனுமதிப்பது போன்ற செயல்களையும் பெண்கள் கட்டாயம் தவிர்த்துவிடுங்கள். விக்கிறவனுக்கு ஒரு கண் போதும், வாங்குகிறவனுக்குத் தான் ஆயிரம் கண்கள் வேண்டும் என்றொரு பழமொழி தமிழில் உண்டு. அது போல ஆண்களை விட பெண்கள் எப்போதும் ஒரு படி மேலே ஜாக்கிரதை உணர்வோடு செயல்பட்டால் இது போன்ற சுய கவுரவத்திற்கு இழுக்கு ஏற்படும் நிலைமையிருந்தும், சமூக நெருக்கடிகளில் இருந்தும், பல இழப்புகளிலிருந்தும் தங்களை காப்பாற்றிக் கொள்ளமுடியும்.

No comments:

Powered by Blogger.