Header Ads

உளுந்தூர்பேட்டை அருகே மணல் லாரி மீது கார் மோதல்: சென்னையைச் சேர்ந்த 7 பேர் பலி

சென்னை அயனாவரம் மார்க்கெட் பகுதியில் உள்ள ராமசாமி தெருவைச் சேர்ந்தவர் அருள்வேதம் (வயது 60). இவர் அயனாவரம் தட்சிணமாற நாடார் சங்கத்தின் மேலாளராக இருந்து வந்தார். இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள குளத்துக்குடி. அருள்வேதத்தின் மனைவி இந்திராவின் (58) அக்காள் மகன் திருமணம் குளத்துக்குடியில் நடந்தது. 

இதில் கலந்துகொள்வதற்காக, கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிவிட்டு கடந்த 26-ந்தேதி அதிகாலை அருள்வேதம் குடும்பத்தினரும், அவரது உறவினர்களும் சென்னையில் இருந்து ஒரு காரில் குளத்துக்குடி சென்றனர்.

பின்னர் நேற்று காலை அவர்கள் அங்கிருந்து மீண்டும் சென்னைக்கு புறப்பட்டு வந்தனர். காரை டேவிட் எத்திராஜ் (35) என்பவர் ஓட்டினார். காரில் பெண்கள், குழந்தைகள் உள்பட 14 பேர் இருந்தனர்.

அவர்கள் பயணம் செய்த கார் நேற்று மாலை 3.30 மணி அளவில் உளுந்தூர்பேட்டையை அடுத்த ஏ.சாத்தனூர் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி, முன்னால் சென்று கொண்டிருந்த மணல் லாரி மீது பயங்கரமாக மோதியது.

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் உடனடியாக எடைக்கல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், எடைக்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜீவ்காந்தி மற்றும் போலீசார் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் (பொறுப்பு) ராஜேந்திரன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று நவீன கருவிகள் மூலம் அப்பளம் போல் நொறுங்கிப்போன காரின் முன்பக்கத்தை அப்புறப்படுத்தி அதில் சிக்கியவர்களை மீட்டனர். 

கார் டிரைவர் டேவிட் எத்திராஜ், அருள்வேதம், அவருடைய மகன் சார்லஸ் (36), ஜாப்ரின் (60), ஜெசிகா (6) ஆகிய 5 பேர் உடல் நசுங்கி இறந்து கிடந்தனர். அவர்களுடைய உடல்களை மிகுந்த சிரமப்பட்டு தீயணைப்பு படையினர் மீட்டனர்.

காரில் இடிபாடுகளுக்குள் படுகாயத்துடன் சிக்கியிருந்த அருள்வேதத்தின் மனைவி இந்திரா, சார்லஸ் மனைவி மெர்சி (20), சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த கிங்ஸ்லி (40), அவருடைய மனைவி பெனிட்டா (36), ஆவடியைச் சேர்ந்த ஜான் என்பவரின் மகன் ஜூலியன் ஷரோன் (4), செல்வராஜ் என்பவரின் மகன் சுந்தர்ராஜ் (36), சுந்தர்ராஜின் மனைவி மெர்சி (31), கிங்ஸ்லி என்பவரின் மகள் ஜெபி (8) ஆகிய 8 பேரையும் தீயணைப்பு படையினர் மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அப்போது வழியிலேயே கிங்ஸ்லி, சுந்தர்ராஜ் ஆகிய இருவரும் பரிதாபமாக இறந்தனர்.

படுகாயம் அடைந்த இந்திரா, சார்லஸ் மனைவி மெர்சி, சுந்தர்ராஜின் மனைவி மெர்சி, ஜூலியன் ஷரோன், ஜெபி, பெனிட்டா ஆகியோர் விழுப்புரம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த கோரவிபத்தில் ஒரு குழந்தை மட்டும் எந்த வித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளது.

இந்த விபத்தின் காரணமாக சென்னை-திருச்சி 4 வழிச்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்துக்குள்ளான வாகனங்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தப்பட்ட பின் போக்குவரத்து சீரானது.

No comments:

Powered by Blogger.