Header Ads

நாளை 2014 புத்தாண்டு பிறக்கிறது: தேவாலயங்கள், கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்

2013-ம் ஆண்டு விடைபெற்று, நாளை (புதன்கிழமை) 2014-ம் ஆண்டு பிறக்கிறது. புத்தாண்டு பிறப்பதையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன. 

சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் சிறப்பு ஆராதனைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேவாலயம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட உள்ளது. முகப்பில் 2014 என்று பிரகாசமான வண்ண விளக்கு அமைக்கப்படுகிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8.30 மணி முதல் தமிழிலும், ஆங்கிலத்திலும் பிரார்த்தனைகளும், திருப்பலியும் நடைபெறுகின்றன. பங்கு குரு பிரான்சிஸ் மைக்கேல் அடிகளார், உதவி பங்கு குரு ரீகன் அடிகளார் ஆகியோர் இவற்றை நடத்துகிறார்கள். 

நுங்கம்பாக்கத்தில் உள்ள புனித அவிலா தெரசா மாதா கோவில், அடையாறில் உள்ள ஏசு அன்பர் கிறிஸ்தவ தேவாலயம் ஆகியவற்றிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடக்கின்றன. அண்ணா மேம்பாலம் அருகே உள்ள புனித ஜார்ஜ் கதீட்ரல் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்தில் இன்று இரவு 11½ மணிக்கு புத்தாண்டு பிரார்த்தனைகள், சிறப்பு ஆராதனைகள் தொடங்குகின்றன. பாதிரியார் இமானுவேல் தேவகடாட்சம் பிரார்த்தனைகளை நடத்துகிறார். தென்னிந்திய திருச்சபைகளின் சென்னை பேராயர் தேவசகாயம் அருளுரை வழங்குகிறார். 

ஏசு அழைக்கிறார் அமைப்பின் சார்பில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை சேத்துப்பட்டில் உள்ள கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நாளை மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. காருண்யா பல்கலைக்கழக வேந்தர் பால் தினகரன் குடும்பத்தோடு புத்தாண்டு பிரார்த்தனையை நடத்துகிறார். 40 அடி நீளமுள்ள புத்தாண்டு கேக் வெட்டும் நிகழ்வும் நடைபெற உள்ளது.

சென்னை தியாகராயநகரில் உள்ள திருமலா-திருப்பதி தேவஸ்தான வெங்கடாசலபதி கோவிலில் புத்தாண்டு பூஜைகள் அதிகாலை 3 மணியில் இருந்து தொடங்குகின்றன. பக்தர்கள், அரை மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்யும் வகையில் நாள் முழுவதும் சர்வ தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை காலை 11.30 மணி வரையும், அதைத் தொடர்ந்து பகல் 12.15 மணியில் இருந்து 2 மணி வரையும், மாலை 3 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரையும், இரவு 8.15 மணியில் இருந்து 10.30 மணி வரையும் சர்வ தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு திருப்பதி லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை, திருமலா-திருப்பதி தேவஸ்தான சென்னை தகவல் மைய தலைவர் கே.அனந்தகுமார் ரெட்டி, உதவி செயல் அதிகாரி பி.பிரபாகர ரெட்டி ஆகியோர் செய்துள்ளனர்.

திருவேற்காடு கருமாரி அம்மன் கோவிலில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு கோ பூஜையுடன் புத்தாண்டு சிறப்பு பூஜைகள் தொடங்குகின்றன. அதைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் பூஜைகள் நடக்கின்றன.

மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நாளை அதிகாலை 4 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முண்டகக்கண்ணி அம்மன் கோவில் மண்டபம் முழுவதும் வாழை, ஆப்பிள், ஆரஞ்சு, அண்ணாசி என அனைத்து வகை பழங்களைக் கொண்டு அலங்காரம் செய்யப்படுகிறது. நாளை காலை 4 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்ககவச அலங்காரத்துடன் பூஜைகள் நடக்கின்றன. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி து.சந்திரசேகரன் செய்துள்ளார்.

பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோவிலில், நாளை அதிகாலை 4 மணிக்கு அனைத்து சன்னதிகளும் திறக்கப்படுகின்றன. பக்தர்களுக்கு பிரசாதம், கோவில் படம் இலவசமாக வழங்கப்படுகிறது.

வடபழனி முருகன் கோவிலில் நாளை அதிகாலை 3 மணிக்கு பழனி ஆண்டவருக்கு சிறப்பு அபிஷேகமும், அதைத் தொடர்ந்து ராஜ அலங்காரம், தங்க, வெள்ளி நாணய அலங்காரம் என பல்வேறு அலங்காரத்துடன் பூஜைகள் நடக்கின்றன. கந்தகோட்டம் முருகன் கோவிலில் புத்தாண்டு தின சிறப்பு பூஜைகளும், மாலையில் சுவாமி புறப்பாடும் நடக்கிறது.

இதுபோல பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்கள், இந்து கோவில்களிலும் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை மற்றும் பூஜைகளுக்கு அந்தந்த கோவில் நிர்வாக அதிகாரிகளும், தக்காரும் ஏற்பாடு செய்துள்ளனர்.

No comments:

Powered by Blogger.